Wednesday, 9 March 2016

சிவபூஜை

சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?   சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும். சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும்  சிவனுக்கு தனி உருவம் கிடையாது.  அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.  

சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது  ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் 'அசல லிங்கம்' என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை 'பரார்த்த லிங்கம்' என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள்.  தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட  தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.

இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் 'சலன லிங்கம்' என்பதாகும். 

மூன்றாவது  வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் 'அசலசல லிங்கம்' ஆகும்.
 

நான்காவது வகை 'சலாசல லிங்கம்' எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.

சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை  ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி  ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே  பூஜைகளை செய்யத்  துவங்க  வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு.


சிவ பூஜை செய்யும்போது பூஜையில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து என ஒற்றைப் படையிலேயே சிவலிங்கங்களை வைத்து அவற்றுக்கு பூஜைகளை செய்ய   வேண்டும். இரண்டு, நான்கு போன்ற இரட்டை இலக்கில் லிங்கங்களை வைத்து பூஜித்தால் அது வியாதிகளை தரும், மன வலிமையை தளர்த்தும் என்பார்கள். 

அடுத்தது  ஆலயங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிவ வழிபாட்டு முறை. சிவன் ஆலயங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட ஏதும் விதி முறைகள் உள்ளனவா என்றால், உண்டு என்பதே சரியான பதில் ஆகும்.  வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா, முடியாதா என்பது இரண்டாம் பட்ஷம். ஆனால் ஞான மார்கத்தை அடைய நினைப்பவர்கள் உறுதியோடு இருந்தவாறு வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை கடைபிடிப்பார்கள்.  வாழ்க்கையில் மேன்மை அடைய நினைப்பவர்கள், அவற்றில் கூறப்பட்டு உள்ள சிலவற்றையாவது முடிந்தவரை  கடை பிடிக்கலாம்.

ஆலயங்களில் சென்று நமஸ்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு வந்துள்ள பழக்கம் ஆகும். வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்துள்ளது.  நமஸ்காரம் செய்வதில் எப்படிச் செய்ய வேண்டும், எவ்வளவு தடவைகள் செய்ய வேண்டும் என்று நியதிகள் உள்ளன. நமஸ்காரத்தை சிவன்  ஆலயத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்றும் சிவ விதிகளில் கூறப்பட்டு உள்ளன.


சிவன் ஆலயங்களுக்கு செல்பவர்கள் தூரத்தில் இருந்தே தென்படும் தூல லிங்கம் எனப்படும் கோபுர உச்சியை கண்டதும் தமது இரு கைகளையும்  தலைக்கு மேலே தூக்கி வைத்து இருகரம் கூப்பி வணங்கிட வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்தாலும் சரி, முடிந்தவரையில் அதை செய்யலாம். வாகனத்தை தாமே ஓட்டிக் கொண்டு செல்பவர்கள் சாலையை விட்டு அகன்று ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி விட்டு அதை செய்ய வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.

அந்த காலங்களில் ஆலயத்துக்கு செல்பவர்கள் நடந்தே சென்று வந்தார்கள் என்பதினால் தூரத்தில் இருந்தே ஆலயத்தைப் பார்த்த உடன் தமது  சிரஸ் மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கினார்கள். ஆனால் தற்காலத்தில் வாகனங்களில் செல்பவர்களால் அப்படி செய்ய இயலவில்லை என்பதினால் அதை விட எளிதான வழியாக ஆலயத்தை சென்று அடைந்ததும் ஆலயத்துக்கு உள்ளே நுழையும் முன் ஆலய கோபுரத்தை பார்த்ததும்  தலை மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கலாம்.  தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது 'மூன்றங்க நமஸ்காரம்' எனப்படுகிறது. அதாவது கைகள், தலை மற்றும் மனதை ஒன்றிணைத்து செய்யப்படும் மூன்று அங்க நமஸ்காரம் ஆகும்.

அதன் பிறகு ஆலயத்துக்குள் சென்றதும் பலிபீடத்துக்கு பின்புறத்தில் இருந்து ஆண்டவனை நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். ஒரு வேளை சிவன்  சன்னதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு இருந்தால் வடக்கை நோக்கி தலையை வைத்து வணங்கிட வேண்டும்.

அது போல தெற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதிகளில் கிழக்கு நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கும் காமம், இச்சை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் போன்ற எட்டு தீய குணங்களையும் ஆலய சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி தருவது போல அங்கேயே அழித்து விட்டு 'உன்னிடம் வருகிறேன் இறைவா, எனக்கு நீயே அருள் புரிய வேண்டும்' என வேண்டிக் கொள்ளும் இடம் ஆகும். 

சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி  பீடத்தின் அருகில் பூமியிலே வீழ்ந்து நமஸ்கரிப்பதின் மூலம் எந்த நலனையும் அடைய முடியாது. அங்கு நமஸ்கரித்து தனது அனைத்து தீய  எண்ணங்களையும் அங்கேயே பலி கொடுத்தப் பின் மனதின் ஆணவத்தை பலியிட்டப் பின் மனதில் மிஞ்சி நிற்கும் எண்ணங்கள் மிஞ்சி நிற்கும் அந்த மேன்மையான நேரத்தில்தான் சன்னதிக்குள் சென்று ஆண்டவனை தரிசிக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் அனைத்து  இடங்களிலும் நமஸ்கரிப்பது சரியல்ல. கோயில் கர்ப்பக்கிரகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால், கொடி மரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கர்ப்பக்கிரகம்  தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ பார்த்தபடி இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கொடிமரத்திற்கும் தெய்வ சன்னதிக்கும் இடைபட்ட பகுதியில் நமஸ்கரிக்கக் கூடாது.


ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வது சிறந்தது.  தலை, இரண்டு கைகள், முகம் போன்றவை, ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வணங்குதல் 'அஷ்டாங்க நமஸ்காரம்' எனப்படும்.


அதைப் போலவே பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' செய்ய வேண்டும்.  கை இரண்டும், தலையும் மற்றும் முகமும் பூமியில் தொட்டிருக்க முழங்கால் முட்டி இரண்டும் மட்டும் தரையில் படுமாறு இருந்தபடி முழங்கால் போட்டபடி நமஸ்கரிக்க வேண்டும். ஸாஷ்டாங்கமாக நமஸ்கரிக்காமல் உடம்பை குறுக்கிக் கொண்டு நமஸ்கரிப்பதின் மூலம் ஸ்த்ரீகள் வளைந்து கொடுக்கும் குணமுள்ளவர்களாக, அடக்கமுள்ளவர்களாக  இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அந்த வகையிலான நமஸ்காரம் ஒரு உருவகமாக அமைந்து  இருக்கிறது.  மேலும் தலை, கைகள் மற்றும் முழங்கால் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு இருந்தவாறு நமஸ்கரிப்பது நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மண வாழ்க்கையையும் தரும் என்பது ஐதீகம்.

அது போலவே வியாதிஸ்தர்களினால் கீழே விழுந்து வணங்க முடியாமல் இருக்கலாம். அப்படி என்றால் அவர்கள் ஆலயத்தில் எப்படி நமஸ்கரிக்க வேண்டும்? கீழே விழுந்து நமஸ்கரிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து கரம் குவித்து வணங்கிட வேண்டும். அதை 'த்ரியங்க நமஸ்காரம்' என்பார்கள். இந்த முறையிலான நமஸ்காரத்தை ஆண்கள், பெண்கள் என இருவருமே செய்யலாம். சிவபெருமானும் அதை மனப்பூர்வமாக ஏற்கிறார். சிவ கடாட்சம் முழுமையாக கிடைக்க இந்த மாதிரியான நமஸ்காரங்களை  செய்யலாம் என்பதும் சிவ விதியில் கூறப்பட்டு உள்ளது.


இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் அவசர வேலையாக வெளியில் போக வேண்டும் என்றாலும் கூட சிவன் சன்னதியில் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுதும்,  நெய்வித்தியம் படைக்கப்படும் போதும்  நமஸ்கரிக்கலாகாது.

அடுத்து சன்னதியை பிரதர்ஷனம் செய்யும் முறை. சாதாரணமாக சன்னதியை ஒருமுறை மட்டுமே பிரதர்ஷணம் செய்து விட்டு பலர் ஆலயத்தில் இருந்து வெளியேறிச் செல்வார்கள். ஆனால் அது சரியான முறை அல்ல. சன்னதியை மூற்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது முறை பிரதர்ஷணம் செய்ய வேண்டும். பிரதர்ஷணம் செய்ய எண்ணம் இல்லாவிடில் சன்னதியை நோக்கி நின்று வணங்கிய பிறகு அப்படியே திரும்பி வந்து விட வேண்டும்.


பிரதர்ஷணம் செய்து முடித்தப் பின் சண்டிகேஸ்வரர் சன்னதிக்குச் சென்று மூன்று முறை கைகளை தட்டியோ அல்லது கைவிரல்களினால் சொடுக்கி சப்தம் எழுப்பியப் பிறகுதான் திரும்ப வேண்டும். தற்காலத்தில் சிலர் சண்டிகேஸ்வரர் சன்னதியில் சென்று சப்தம் எழுப்பக்கூடாது என்ற வாதத்தைக் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆலயங்களில் பைரவர் எப்படி விழித்திருந்து தாம் உள்ள சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவாரோ, அது போலவேதான் சண்டிகேஸ்வரர் சிவபெருமான் சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவது மட்டும் அல்லாமல் அங்கு வருபவர்களின் வரவை தன்னிடம் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். அவரை தட்டி எழுப்பும் வகையில் எழுப்பப்படும் சப்தம் அவர் சன்னதியில் மணி ஓசையை எழுப்புவதற்கு சமமானது. மற்ற சன்னதிகளில் உள்ளதைப் போல அவரது சன்னதியில் ஆலய மணி தொங்க விடப்பட்டு இருப்பது இல்லை என்பதினால் மணி ஓசை எழுப்புவதைப் போல கைகளினால் சப்தம் போடுகிறார்கள்.

சிவபெருமானின் பூஜை மற்றும் விரதங்களில் மேன்மையானது பிரதோஷ பூஜை ஆகும். சிவபெருமானுக்கு எவர் ஒருவர் பூஜை செய்யவில்லையோ, பூஜை செய்ய முடியாத நிலையில் உள்ளாரோ அவர்கள் வேறு எந்த பூஜையயுமே செய்யத் தேவை இல்லை. பிரதோஷ தினத்தன்று சிவன் ஆலயத்துக்குப் போய் சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசனம் செய்து வணங்கினால் போதும். சிவபெருமானுக்கு பூஜை செய்த பலன் அனைத்தும் கிடைத்து விடும். தோஷம் என்றால் குறை உள்ளது என்பதான அர்த்தம். பிரதோஷம் என்றால் குறை அற்றது என்பது பொருள் ஆகும்.  ஆகவேதான் குறை இல்லாத அந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும்.  அதுவும் சனிக்கிழமைகளில் வரும் சனி பிரதோஷம் தனிப் பிரதோஷமாக   கருதப்படுகிறது. அதன் காரணமும் பிரதோஷ பூஜை துவங்கியதின் காரணமும் இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ள முடியும்.


ஒருமுறை தேவலோகத்தில் கைலாயத்தின் சபையில் அனைத்து கடவுட்களும், தேவர்களும் கூடி இருந்த போது  அங்கு நடனமாடிய ஒரு தேவ கன்னிகையின் நடனத்தை மெச்சிய  விஷ்ணுவானவர்,  வேண்டும் என்றே தனது மனைவி லஷ்மியைப் பார்த்து அந்த கன்னியின் நடனத்தை பெருமளவு புகழ்ந்து பேசி, அவளுக்கு லஷ்மி போட்டிருந்த மாலையை பரிசாகத் தருமாறு அவளுக்கு சைகை காட்டினார். அதைக் கவனித்து விட்ட பார்வதி தேவி லஷ்மியை முந்திக் கொண்டு உடனே தனது கழுத்தில் இருந்த மாலையை  கயற்றி அந்த நடனமாடிய மங்கைக்கு பரிசாகத் தந்தாள். அப்படி விஷ்ணு பகவான் செய்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் கன்னிகையும் அதை மெத்த மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் துர்வாச முனிவரை சந்திக்க நேரிட்டது. அவள் கையில் இருந்த அற்புதமான மாலையின் அழகில் மயங்கி அதை தனக்கு பரிசாகத் தருமாறு கேட்டார். அவளும் தயங்காமல் அதை அவருக்கு தந்தப் பின் அந்த மாலை தனக்குக் கிடைத்தக் கதையையையும் மகிமையையும்   கூறினாள். 

அப்போது இந்திரனக் காணச் சென்று கொண்டு இருந்த துர்வாச முனிவர் இந்திரனுக்கு என்ன பரிசை கொண்டு செல்லலாம் என எண்ணிக் கொண்டு செல்கையில் அந்த தேவ கன்னிகை மூலம் கிடைத்த மாலையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை கொண்டு போய் தேவேந்திரனிடம் தந்தார். அந்த மாலையின் மகிமையைக் கூறும் முன்னரே இந்திரன் தனது பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஐராவதத்தின் தும்பிக்கை   மீது அந்த மாலையை வைக்க, அந்த யானையும் அதை கீழே தள்ளி காலால் மிதித்து துவம்சப்படுத்தியது. அதைக் கண்ட துர்வாச முனிவர் பெரும்  கோபம் அடைந்தார். தான் தந்த மாலை, அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருந்து கிடைத்த மாலையை இந்திரன் அவமானப்படுத்துவதா என்ற சினம் கொண்டார். இந்திரனுக்கு அவன் சக்திகளும் செல்வங்கள் அனைத்தும் அழியட்டும் என சாபமிட்டார். அதைக் கேட்ட இந்திரனும் தேவர்களும் வெலவெலத்துப் போய் துர்வாச முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கூறுமாறு அவரிடம்  வேண்டினார்கள். துர்வாச முனிவரும் சினம் அடங்கியதும், அவர்கள் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து வெளிவரும் அமிர்தத்தைப் பருகினால் மட்டுமே அந்த சாபம் விலகும் என தெளிவுபடுத்தினார். 

பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து உண்ண வேண்டும் என்ற விதிக்கான ஒரு பின்னணிக் காரணம் உண்டு. அது துர்வாச முனிவருக்கும் தெரியாது. ஏன் எனில் அது பரமேஸ்வரரின் திருவிளையாடல் ஆகும். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பல காலத்துக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு சம்பவமே அதற்க்குக் காரணம் ஆகும்.

ஒரு கட்டத்தில் அசுரர்கள் பலம் அதிகரித்து  தேவர்களின் அழிவு  துவங்கும். அந்த வேளையில் தேவலோகத்தின் பெருமையை வெளிப்படுத்தி, மும்மூர்த்திகளின் அவதாரகணங்களான  தேவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்து அவர்களை அழிவில் இருந்து காக்க  வேண்டும்  என்பதற்காக  பரப்பிரும்மன்  பிரபஞ்சத்தை படைத்தபோதே தமது சக்தி கொண்ட  சிறிய  உருண்டையை  பாதாளத்தின் அடியில் ஒளித்து  வைத்திருந்து  அதைப் பாதுகாக்க அதன் மீது கொடிய  விஷத்திலான படுக்கையையும் அமைத்து இருந்தார். அதை  ஸ்வாசித்தாலே போதும்,  மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டது அந்த நஞ்சு. பூமியின் அடிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு கீழே பாதாள லோகம் உள்ளது. பல யோசனை தூரம் விரிந்து படந்துள்ள அந்த பாதாள லோகத்தின் அதிபதியே வாசுகி எனும் நாகம் ஆகும். அங்கு லட்ஷக்கணக்கில்  நாகங்கள் வசித்து  வந்தன. அந்த பாதாளத்தில் யாராலுமே புக முடியாது. அதனால் நாகங்களால் அந்த அமிர்தமும் அவைகளுக்கு தெரியாமலேயே பாதாளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தன. அப்படி ஒளித்து   வைக்கப்பட்டு இருந்த  அமிர்தத்தை   வெளியில் எப்படி எடுப்பது ? அது  பிற்காலத்தில் மும்மூர்த்திகள் மூலமே  வெளிப்பட வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தி இருந்ததினால் அதற்கான வேளை வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாக மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் நடைபெறலாயின. 

அதற்காக நடந்த அந்த நாடகத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும்  அமிர்தத்தை எப்படி வெளியில் எடுக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை குறித்துப் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அமிர்தத்தை வெளியில் எடுக்க விஷ்ணு தக்க ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் அது வெளி வருவதற்கு முன்னால் அமிர்தத்தின் மீது ஒரு கேடயம் போல படர்ந்திருந்த விஷத்தை வெளியில் எடுக்க வேண்டும். அதை  ஸ்வாசித்தாலே போதும்,  மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டிருந்த அந்த நஞ்சு  உலகெங்கும் பரவினால் அனைவருமே மரணம் அடைந்து விடுவார்களே என்ற அந்தக் கவலையை தன்னிடம் விட்டு விடுமாறு சிவபெருமான் விஷ்ணுவிற்கு  தைரியம் அளித்தார்.  அந்த விஷத்தன்மையை தடுப்பது தன் பொறுப்பு என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர்தான் பரமாத்மனின் அவதாரமாயிற்றே ! 

அத்தனைப் பெரிய பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுப்பது தேவர்களால் மட்டுமே முடியாத காரியம் என்பதினால், அமிர்தத்தின் தன்மையைக் கூறி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்க அசுரர்களில் உதவியையும் பெறுவதற்கு கிருஷ்ணர் உருவில் இருந்த விஷ்ணு யோசனைக் கூறி அசுரர்களிடம்  நயவஞ்சகமாகப் பேசி  அதையும் நிறைவேற்றித் தந்தார்.  மந்தார  மலையை  மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, மத்து சுழலும் மேடையாக  விஷ்ணுவே கூர்மாவதாரம் எடுத்து  கடலுக்குள் அமர்ந்து கொள்ள  பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்கும் பணி துவங்கியதும் அந்தக் கொடிய விஷம் முதலில் வெளியில் வர அதை சிவபெருமான் தன கையில் ஏந்தி உண்டு தனது தொண்டையில் அடக்கிக் கொள்ள, மீண்டும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு அசுரர்களை ஏமாற்றி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மீட்டுக் கொடுத்து அவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்தார்.

தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி  மகிழ்ந்தார்கள். சிவபெருமானையே மறந்து விட்டார்கள். மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்றுதான்  அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை  உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். 


விஷத்தை தனது தொண்டையில் அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்த சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப்  பின் அனைவரையும் ரட்சிக்கும் விதமாக தனது வாகனமான நந்தியின் மீது ஏறிக் கொண்டு அதன் இரு கொம்புகளுக்கும் இடையே நின்றபடி அற்புதமான நடனம் ஆடினார். அப்போது அதைக் கண்டு களித்த அனைவருக்கும் பேரானந்த மன அமைதியும், ஆனந்தமும் கிடைத்தது. அது மட்டும் அல்லாமல் சிவபெருமானின் பரிபூரண ஆசியும் கிடைத்தது.  அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் சுக்கிலபக்ஷம் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் இடையே வருகின்ற திரயோதசித் திதியாகும். அது நடைபெற்ற நேரமோ  சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் அதன் பின்னர் வந்த  மூன்றே முக்கால் நாழிகையாகும். அதனால்தான் முன்னரே கூறியது போல தோஷமற்ற  பிரதோஷ காலத்தில்  சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.   

எந்த ஸ்வாமி  சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து  துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.  அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது.  இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம்  என்றும் கூறுவது உண்டு.


பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன?  ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவபெருமானை  நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம்  வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த  பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது. வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று  கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமி  மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதைதான் கோமுகம் என்பார்கள்.  பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக்  கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும்.
 

இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும். அப்போதுதான் அவர் நீங்கள் எத்தனை முறை சிவனை வலம் வந்துள்ளீர்கள் எனும் கணக்கை அவருக்கு தெரிவிப்பாராம்.  இதுவும் ஐதீகம்தான்.  இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்கும் இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.

வாரிவனேஸ்வரேர்

ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீ லங்காவும் ஒரே நிலப்பரப்பாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருந்துள்ளன. முக்கியமாக பல சக்தி வாய்ந்த சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் பலவும் உண்டு. அதன் காரணம் ஸ்ரீ லங்கா ராமாயணக் காலத்துடன், அதன் கதையுடன் சம்மந்தப்பட்ட இடமாகும். சிவ வழிபாடு அதிகம் இருந்த பூமியும் ஆகும். ஸ்ரீ லங்காவை ஆண்ட பெரும் சிவபக்தனான ராவணன் சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார். அதனால் அவர் மூலமும் பல சிவாலயங்கள் பெருமளவில் புகழ்பெற்று இருந்துள்ளது.

வாரிவனேஸ்வரர் எனும் ஒரு புகழ்பெற்ற ஆலயம் இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு இருந்துள்ள ஆலயம் ஆகும். உள்நாட்டு யுத்தத்தினால் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும் அந்த ஆலயம் அந்த காலத்தில் மகத்தானதாக கருதப்பட்டு வந்திருந்தது. அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் என்பதாகக் கூறுகிறார்கள். போர்த்துகீசியர்களும், டட்ச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்களும் ஸ்ரீலங்காவில் வந்து இறங்கியபோது அங்கிருந்த இந்துக்களின் பல ஆலயங்களை நாசப்படுத்தி அழித்து உள்ளார்கள். ஆனால் பின்னர் அவற்றில் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே வாரி வனம் எனும் பகுதியில் உள்ள வாரிவனேஸ்வரர் எனும் சிவபெருமான் ஆலயமும் ஆகும். சோழ மன்னர்கள் காலத்தை சேர்ந்த இந்த ஆலயத்தைக் குறித்து தக்ஷிண கைலாசம் எனும் புராணத்திலும் குறிப்பு உள்ளனவாம். 

நைமிசாரண்யா வனத்தில் வாழ்ந்திருந்த முனிவர்களுள் சூதக முனிவரே தலைசிறந்தவர். அவரே புராணங்கள் பலவற்றையும் முனிவர்களுக்கு எடுத்துரைத்தவராக கருதப்படுபவர். இப்படியான நிலையில் நைமிசாரண்யா வனத்தில் என்றும்போல அன்றும் வந்து கூடி இருந்த ரிஷி முனிவர்கள் சூதக முனிவர்கள் வந்ததும் அவரை எதிர்கொண்டு வரவேற்று அவருக்கு உரிய மரியாதையுடன் கலந்த உபசாரங்களைச் செய்தனர். பிறகு ஒரு வேண்டுகோளையும் அவர் முன் வைத்தனர். 'மாபெரும் முனிவரே, சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர். கயிலை, காசி, காஞ்சி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களை குறித்து விளக்கமான கதைகளை எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். அந்த தலங்களைப் போன்ற போல சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டுகிறோம்' என்று கேட்டார்கள். அதைக் கேட்ட சூதக முனிவர் அவர்களுக்கு ஸ்ரீ லங்கா எனும் பகுதியில் இருந்த வாரிவனேஸ்வரர் சிவாலயத்தின் கதையைக் கூறத் துவங்கினார். அவர் கூறியதாக கூறப்படும் அந்த தலத்தின் சுருக்கமே இதுவாகும்.

''வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் அமிர்தபாஷணி சமேத சந்திரசேகர வாரிவன நாத சிவபெருமான் இருந்தவாறு அருள் பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தில் வந்து விருபாக்கன் எனும் சோழ மன்னன் வழிபாட்டு வந்தார். விருபாக்கன் பெரும் சிவா பக்தர். அந்த ஆலயம் உள்ள இடம் அனைத்துமே நீர் நிலைகள் பலவும் நிறைந்த இடமாக இருந்ததினால் அந்த வனத்துக்கு வாரி வனம் என்று பெயர் வந்துள்ளது. (வாரி என்றால் நீர், வெள்ளம், கடல், நீர் நிலை மற்றும் மடை போன்ற பல அர்த்தங்கள் உண்டு). 

விருபாக்கன் எனும் அந்த சோழ மன்னன் ஆண்டு வந்திருந்த காலத்திலே அவன் திருவாஞ்சியபதி என்ற நகரில் வசித்து வந்திருந்தான். அவன் பெருமளவிலான தான தர்மங்களை அந்தணர்களுக்கு அளித்து வந்தான். அந்தணர்களை பெரிதும் மதித்து வந்தான். பெரும் சிவ பக்தன் என்பதினால் சிவன் ஆலயத்துக்கு சென்று வழிபடாமல் உணவு அருந்திய நாளே கிடையாது எனும் அளவில் சிவபக்தனாக இருந்தவன். அவனது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் ஒரு அந்தணர் வேடம் பூண்டு யாசகம் வேண்டி அரண்மனைக்குச் சென்று மன்னனை தரிசித்தார்.

அந்த அந்தணனைக் கண்டதும் அரசன் அவரை எழுந்து நின்று வரவேற்று அவரை முறைப்படி வணங்கி நமஸ்கரித்தான். அதன் காரணம் அந்த மன்னன் அந்தணர்களை தெய்வமாகவே மதித்தவன். அந்தணர்களே தெய்வீகத்தின் முதல் படியாக உள்ளவர்கள் எனக் கருதி வாழ்ந்தவன். அதனால்தான் அந்தணர்கள் அந்த மன்னனிடம் நேரடியாக சென்று யாசகம் கேட்பார்கள். மன்னனை நியாயமான காரியத்துக்காக சந்திக்கச் செல்லும் அந்தணர்களை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை எனும் அளவு அந்தணர்கள் போற்றப்பட்டு வந்திருந்தார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் அவனது ராஜ்ய பரிபாலனத்தில் அந்தணர்கள் ஒரு குறையும் இல்லாமல் நலமாகவே வாழ்ந்து வந்தார்கள். நாடும் செழிப்புடன் இருந்தது.

அந்த நிலையில் தன்னிடம் வந்து யாசகம் கேட்ட அந்தணரிடம் அவருக்கு என்ன வேண்டும் என பணிவுடன் அரசன் கேட்க, அந்த அந்தணரும் கூறினார் 'மன்னா நான் ஒரு அநாதை, ஆதரவற்று உள்ளேன். தங்க வீடும் இல்லை, உண்ண நல்ல உணவும் இல்லை. நாட்டில் அடித்த புயலினால் வீடும் வாசலும் இழந்து, என் மனைவியும், குழந்தைகளும் கதியற்றுப் போய் அங்காங்கே சென்று கொண்டே இருந்தவாறு எங்கெல்லாம் சத்திரங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் தங்கி, தானம் கிடைக்கும் உணவை உண்டு கொண்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு வயதாகி விட்டதினால் வேறு வேலை செய்தும் பிழைக்க வழி இன்றி இருக்கிறேன். ஆகவே எனக்கு ஒரு வீடும், நல்ல வருமானம் கிடைக்கும் வழியையும் தந்து காக்க வேண்டும். இல்லை என்றால் உன்னுடைய இந்த நாட்டில் பட்டினியால் வாடும் நாங்கள் அனாதையாகவே மரணம் அடைந்து விடுவோம். உனக்கும் பிராமணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விடும் '. 

அதைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டார். ஒரு பிராமணர் தன்னுடைய நாட்டில் பட்டினியால் மரணம் அடைந்தால், அதனால் தனக்கு பிராமணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டு பெரும் பாவம் வந்து சேர்ந்து பல ஜென்மங்களுக்கு தன்னை வாட்டி வதைக்கும் என பயந்தான். மேலும் கருணை உள்ளம் படைத்த அந்த மன்னன் சற்றும் யோசனை செய்யவில்லை. உடனே தயங்காமல் தான் தங்கி இருந்த அரண்மனை,விளை நிலங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் அந்த பிராமணனுக்கு தானமாகக் கொடுத்து விட்டு அரசைத் துறந்து மனைவியுடன் வேறு இடம் சென்று வசிக்க முடிவு செய்தார். ஒன்றுமே இல்லாதவனை யார்தான் அரசனாக ஏற்றுக் கொள்வார்? அனைத்தையும் துறந்துவிட்ட விருபாக்கனின் நிலையைக் கேள்விப்பட்ட அண்டை மானில மன்னன் அடுத்த நாளே அந்த நாட்டை கைப்பற்றிக் கொள்ள விருபாகனும் தனது மனைவியுடன் காங்கேசன்துறையின் கடற்கரையை அடைந்து அங்கு இருந்த படகோட்டியிடம் தன் நிலையைக் கூறி தன்னை அந்த கடற்கரையின் அடுத்த கரையில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டு அவன் படகில் ஏறிச் சென்றார். இவை அனைத்துமே சிவபெருமானின் நாடகத்தின் ஒரு அங்கமாகவே இருந்தன. அவர் தன மீது உண்மையிலேயே எந்த அளவு பக்தியை விருபாகன் கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளவே இத்தனை கஷ்டங்களையும் அவருக்குத் தந்திருந்தார். யாழ்ப்பாணத்தை அடைந்த விருபாகனும் தனது மனைவியுடன் அதன் அருகில் இருந்த கொடிக்கிராமம் எனும் இடத்துக்குப் போய் அங்கிருந்த வனத்தில் தங்கினார். நல்ல வேலையாக அந்த மன்னனுக்கு குழந்தைகள் இல்லை என்பதினால் அவரால் எளிதில் முடிவெடுத்து செல்ல முடிந்தது. 

மன்னன் கையில் அதிக காசும் (பணம்) இல்லை. அந்த காலங்களில் எவருமே அதிக பணத்தை வைத்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான வர்த்தகங்கள் பண்டம் மாற்றிக் கொள்ளும் முறையிலேயே அமைந்து இருந்தது. தம்மிடம் உள்ள பொருட்களை பிறருக்கு தந்து தனக்கு தேவையான பணம் அல்லது பொருளைப் பெற்றுக் கொள்வார்கள்.

இந்த நிலையில் திடீர் என தள்ளப்பட்டு விட்ட விருபாக்கனும் வாழ்க்கைக்கு என்ன செய்யலாம் என யோசனை செய்தவாறு வனத்தில் தங்கி இருந்தபோது, அங்கு பல பசுக்கள் ஏகாந்தமாக சுற்றித் திரிவதைக் கண்டான். அவன் பிறப்பால் வியாபார வம்சத்தை சேர்ந்தவனாக இருந்திருந்ததினால் பசுக்களை வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்தான். அவனது மனைவியும் அவனுக்கு உதவ முன் வந்தாள். அவர்கள் வனத்தில் இருந்த சில பசுக்களை பிடித்து வந்து அங்கேயே சிறு குடிசை அமைத்துக் கொண்டு வாழத் துவங்கினார்கள். அந்த பசுக்களின் பாலைக் கறந்து அருகில் இருந்த ஊர்களில் சென்று விற்று விட்டு தமது வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இப்படியாக சில நாட்கள் வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தபோது, ஒருநாள் பாலைக் குடத்தில் எடுத்துக் கொண்டு பக்கத்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தபோது அவன் கால் தடுக்கி விழ பால் குடம் கீழே விழுந்து உடைந்தது. இப்படியாக அதே இடத்தின் வழியே அவன் செல்லும்போதெல்லாம் அதே இடத்தில் அவன் கால் தடுக்கி விழுந்து பால் குடம் உடைந்து கொண்டே இருக்க அவனுக்கு சந்தேகம் வந்தது. இந்த குறிப்பிட்ட இடத்திலேயேசில தினங்களாக நாம் ஏன் தினமும் தடுக்கி விழுகிறோம் என யோசனை செய்தவனுக்கு காரணம் புரியவில்லை.

ஆகவே அந்த பாதையை தவிர்த்துவிட்டு சற்று தள்ளி நடந்து செல்லலாம் என நினைத்தவன் அந்த பாதையை சுற்றிலும் செடி கொடிகளாக படர்ந்து இருந்ததைக் கண்டான். அந்த ஒரு இடத்தில் ஒருவர் மட்டுமே நடக்கும் வகையில் மண் பாதை இருந்தது என்பதினால் அந்த இடத்தை சுற்றி இருந்த செடி கொடிகளை அகற்றிவிட்டு வேறு பாதையை அங்கு அமைத்துக் கொள்ளலாம் என எண்ணிக் அந்த இடத்தை சுற்றி வளர்ந்திருந்த செடிகொடிகளை அகற்றத் துவங்கியவன் ஆச்சர்யம் அடையும் வகையில் அவனை தடுக்கி விழச் செய்து கொண்டு இருந்தது அங்கிருந்த சிறு சிவலிங்கமே என்பதைக் கண்டவன் அப்படியே பயந்து போய் மூர்ச்சையாகி விழுந்தான். சற்று நேரம் பொறுத்து கண் விழித்து எழுந்தவன் முன்னாள் சிவபெருமான் அவனுக்கு லிங்க உருவாய் காட்சி தந்தார். பக்தியினால் சூழப்பட்ட விருபாக்கன் அங்கேயே அமர்ந்து கொண்டு சிவனைக் குறித்து தோத்திரப் பாடல்களைப் பாடலானான்.
மறுநாள் முதல் அவன் பசுவின் பாலைக் கறந்ததும் முதலில் அந்த இடத்துக்கு வந்து அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தப் பின்னரே பாலை விற்பனைக்கு எடுத்துச் செல்வான். இப்படியாக சில நாட்கள் கழிந்தபோது மீண்டும் சிவபெருமான் அவரை சோதிக்க எண்ணினார். அவன் மூலம் தான் அங்கு குடியிருப்பதை உலகிற்கு எடுத்துரைத்து, விருபாக்கனின் பக்தியையும் வெளிப்படுத்திக் காட்ட நினைத்தார். ஆகவே ஒருநாள் அந்த வனப்பிரதேசம் முழுவதிலும் பெரும் மழையை பொழிய வைத்து தண்ணீரால் மூழ்கடித்து வைத்து வெள்ளக் காடாக்கினார். என்றும் போல மறுநாளும் பாலைக் கறந்தப் பின்னர் அந்த சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்ய வெளியில் வந்த விருபாக்கன் வெள்ளக்காடாக காட்சி அளித்த அந்த இடத்துக்கு எப்படிப் போவது என தெரியாமல் மனம் தத்தளித்துக் குழம்பினார். ஆனால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யாமல் கறந்த பாலை எடுத்துக் கொண்டு விற்பனைக்கு செல்லவும் மனம் இல்லாமல் அப்படியே பால் குடத்துடன் வீட்டு வாயிலில் அமர்ந்து கொண்டார்.

இரவு முடிந்து பகல் வந்தும் வெள்ளமும் வற்றவில்லை. விருபாக்கனும் இடத்தை விட்டு நகரவில்லை. இப்படியாக உணவின்றி, உறக்கமும் இன்றி மூன்று நாட்களை விருபாக்கன் அப்படியே கழித்தார். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யாமல் வியாபாரத்துக்கு செல்ல மாட்டேன் என முடிவு செய்தவனின் அவனது பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்துபோன சிவபெருமான் உடனடியாக பைரவரை அழைத்துக் கூறினார் 'பைரவா, இனியும் தாமதிக்காமல் நீ உடனே இங்குள்ள தண்ணீரை வற்ற வைத்து எனது பக்தன் எனக்கு பால் அபிஷேகம் செய்யும் நிலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்'. அதைக் கேட்ட பைரவரும் உடனடியாக தனது வலக்கரத்தில் இருந்த ஒரு சூலத்தை அந்த வெள்ளக்காடாக இருந்த பகுதியில் தூக்கி எறிய அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பகுதியை முழுக அடித்திருந்த தண்ணீர் முற்றிலும் வற்றி மீண்டும் அந்த இடம் பழைய நிலைக்கு வந்தது.

திடீர் என ஒரு மாயையைப் போல வெள்ளம் வடிந்ததைக் கண்ட விருபாக்கன் பெரும் மகிழ்ச்சி அடைந்து பால் குடத்தை எடுத்துக் கொண்டு போய் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் விற்பனைக்கு எடுத்துச் சென்றார். நடந்த அனைத்துமே ஒரு கனவு போல அமைந்து இருந்தது. அவர் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ததுமே அவர் முன் சிவபெருமான் நந்தி மீது ஏறி வந்து காட்சி தந்து அவனுடைய ராஜ்யத்துக்கு சென்று மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்கலாம் என்றும், அந்த அண்டை மானில மன்னன் உருவில் தான்தான் வந்து நாட்டை எடுத்துக் கொண்டதாகவும் கூற அதை விருபாக்கன் ஏற்கவில்லை. மாறாக தான் அங்கேயே மன அமைதியுடன் இருப்பதினால் வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்து கொண்டு அவருக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்க சிவபெருமானும் அவன் கேட்ட அருளை தந்தார். அதனால் விருபாக்கனும் சிவபெருமான் தனக்கு காட்சி தந்த அதே ரூபத்தில் அங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், தான் அங்கேயே இருந்தவாறு அவருக்கு தினமும் பால் அபிஷேகம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் மீண்டும் வரம் கேட்க அவரும் அவனுக்கு அவர் கேட்ட வரத்தை தந்து அருளினார். அடுத்த கணம் சிவபெருமானும் அந்த இடத்திலேயே வாரிவனேஸ்வரராக பெரிய லிங்க உருவெடுத்து அமர்ந்தார்.

பல காலம் விருபாக்கனும் தனது மனைவியுடன் அங்கேயே தங்கி இருந்து கொண்டு வாரி வனத்தில் இருந்த அந்த சிவலிங்கத்தை வாரிவனேஸ்வரராக கருதி பூஜித்தவாறு இருந்தான். அதன் பின் அவர் சிவலோகப் பிராப்தி பெற்று கைலாயத்துக்கு சென்றார்''. இப்படியாக சூதக முனிவர் அந்த ஆலயத்தின் கதையை முனிவர்களுக்குக் கூறினார்.

அன்று அந்த இடத்தில் அந்த மன்னன் விருபாக்கன் கட்டிய சிறு ஆலயமே பின்னர் வந்த சோழ மன்னர்களினால் பெரும் ஆலயமாக எழுப்பப்பட்டது. அப்படி எழுந்த ஆலயமே வாரி+வனம் + ஆலயம் என்பது வாரிவனநாதர் ஆலயம் என்பதாயிற்று. அதுவே இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த ஆலயம் ஆகும்.

பறங்கியர் எனும் டட்ச் ஆட்சியின்போது இந்துக்களின் ஆலயங்கள் இடிக்கப்பட்டபோது இந்த ஆலயமும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. ஆகவே பக்தர்கள் அந்த ஆலயத்தில் இருந்த லிங்கத்தையும், அம்பிகையையும் அழிவில் இருந்துக் காப்பாற்ற ஆலயத்தில் இருந்து இரவோடு இரவாக அவற்றை எடுத்து அந்த ஆலயத்தில் இருந்த கிணற்றில் போட்டு ஒளித்து வைத்து விட்டனர். ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர் காலத்தில் ஐந்து அடி நீளமான அமிர்தபாலகால பூசணி எனும் பெயர்க் கொண்ட தேவியும், சிவலிங்கமும், மேலும் சில தெய்வ சிலைகளும் கிணற்றில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு ஆலயமும் கட்டப்பட்டது. இந்த ஆலயத்துக்கு 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடந்துள்ளது.

Monday, 7 March 2016

மஹா சிவராத்திரி

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும்.

சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், சாத்தாவோலை (வயல்கரை)  சம்புநாதீஸ்வரர்ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. இத் தினத்தில் பணிப்புலம்-சாத்தாவோலை சம்புநாதீஸ்வர், கீரிமலை நகுலேஸ்வரர் தேரினில் ஆரோகணித்து வேண்டுவார் வேண்டுவதை ஈர்ந்தருளுகின்றனர்.

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம்குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும்.  இத் திருநாட்களில்தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்துஇறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்-கூறுகின்றார்.

தனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்துஅமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும்.விழிப்புடன் இருத்தல் ஆகும். 

பசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல்,  முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல்ஆகும்.

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.  மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

சிவனுக்குரிய விரதங்களாக நித்யசிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

நித்ய சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.

பட்ச சிவராத்திரி:
தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம். 

மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி : 
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவதுஎன பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம்செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச்சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்டவேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால்,அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? 
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். 

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்

என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில்லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன. 

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.  "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

மகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் 

1.  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.

2.  லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

3.  உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

4.  தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

5.  எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

6.  வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களானபவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில்"பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு".சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்"நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜைமுப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும்சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும்சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரமா, விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.

சிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்
அடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.

பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர். இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.

வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.
சிவராத்திரியில் செய்யவேண்டிய அபிடேக ஆராதனைகள்

சிவராத்திரி விரத விதிகள்
சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.

நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே! தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.

சிவராத்திரி நன்னாளின் சிறப்பு
எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.

கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:

1.அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.

2.அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.

3.கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.

4.பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்

5.மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.

கண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.

"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம். ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்." என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.

நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக.

"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"
திருமந்திரம்

மஹா சிவராத்திரி விரதப்பலன்:
அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வரஎன்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.

அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் தூ‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள்திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள்ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம், ஸ்ரீ கோகர்ணம் மற்றும் பணிப்புலம் வயல்கரை சம்புநாதீஸ்வரர் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம்பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள்,

1.  சுயம்புலிங்கம் - தானாகவே தோன்றியது.

2.  காணலிங்கம் - விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது.

3.  தைவிகலிங்கம் - விஷ்ணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது.

4.  ஆரிடலிங்கம் - இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது .

5.  மானுடலிங்கம் - மனுடராலே தாபிக்கப்பட்டது.

மானுடலிங்கத்திலும் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனிலும் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனிலும் உயர்ந்தது காணலிங்கம்; அதனிலும் உயர்ந்தது சுயம்புலிங்கம்.

சிவனாருக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு: 
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலம்:
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.

லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.

மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ”இருநிலனாய் தீயாகி” எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.

நிகழ்வுகள்:

நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்திசிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம். 

விரதங்களில் கடுமையானதும் கட்டுப்பாடு மிக்கதும், நிறைந்த பலந்தருவதும் இச் சிவராத்திரி விரதமேயாகும். எனவே மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயபக்தியுடனும்அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.