Monday, 28 December 2015

சிவ ஸ்தோத்திரம்

எல்லாவுலகங்களுக்கும் தலைவனே ! ஞான சொருபியே ! முதற்காரணனே! திரிகரணங்களுக்கும் எட்டாதவனே ! உனக்கு வெற்றி உண்டாகுக!
சமான ரஹிதனே! எண்ணுதற்கரியவனே! முழு மங்கல் சொரூபியே! தாணுவே காரண ரஹிதனே! பரமானந்த ஸ்வரூபியே! ஆனந்த காரணனே ! ஈஸ்வரனே! தலைவனே!. திருவருள் சொரூபனே!. உனக்கு ஜயமுண்டாகுக! சர்வாண்டங்களிலும் வியாபித்து இருப்பவனே! யாவற்றுக்கும் மேலானவனே! உனக்கும் மேலாக ஒன்றும் இன்றும் இல்லாதவனே! அழிவில்லாதவனே!. உற்பத்தியில்லாதவனே மாயா அதிதனே!  இந்த பூஜையை அடியேன் செய்ததனால் அடையும் பயனை எளியேன் அடையும்படி திருவருள் செய்யவேண்டும்!

உலகங்கள் யாவற்றுக்கும் தாயாகி உள்ளவளே1 உலக சொரூபியானவளே! பேரழகுடையவளே! மனதில் உண்டாகும் அஞ்ஞானத்தை ஒழிப்பவளே. எல்லா சமயங்களுக்கும் தலைவியே! குணஸ்வரூபியானவளே! நிர்குணஸ்வரூனியே! ஞானிகள் இதயத்தில் எழுந்தருளி இருப்பவளே! ஜய! ஜய! சர்வலோகங்களுக்கும் தலவனான சிவபெருமானுடைய மனைவியாக விளங்குபவளே! தேவர் முதலிய யாவரும் துதி செய்யப் பெற்றவளே! உலகத்தை படைப்பவளே! மங்கலங்களையெல்லாம் உண்டாக்குபவளே! உன்னுடைய திருவடியை என் இதயத்தில் இருத்தி என் ஆவலால் துதித்து என் சிரத்தால் பணிகிறேன்! தேவீ உன்னிடத்திலேயே சர்வாண்டங்களும் லயமடைகின்றன. சூலாயுதம் ஏந்திய எந்தையாகிய சிவபெருமான் உன்னையன்றி பயன் அளித்ததும் இல்லை. ஆகையினால் அண்ட கோடியுள்ள ஆன்மாக்கள் யாவும் உன்னுடைய திருவடிகளுக்கே பணி செய்யும். உன்னுடைய திருவருளை எனக்குத் அருள் செய்ய வேண்டும்வேண்டும்!

ஐந்து திருமுகங்களும் பத்துத் திருகரங்களும் ஸ்படிக நிறமும் உடைய அக்ஷ்ர ரூபியும், பிரம்ம ரூபியும், கலா ரூபியும் ஆகிய சகல நிஷ்கள் வடிவமைந்த சிவமாய் சாந்தியாதீதத்தில் அமர்ந்தருளிய சதாசிவ மூர்த்தி நன்றாக திருவருள் புரிவார். ஆகையால் அப்பெருமானின் திருத்தொடையின்மீது இச்சாசக்தி வடிவமாக பொருந்தி யாவற்றுக்கும் தாயாகி உள்ளவளே, என்னை பாவங்கள் அணுகாதவாறு விலக்கி அழியாத உயர் பதவியை தந்தருள வேண்டும். ஜடா முடியை உடைய சங்கர பகவானும் பர்வத ராஜ புத்திரியாகிய உமா தேவியாரும் அன்புடையவர்களாய் திருவாய் மலர்ந்தருளும் சிவஞானம் ஆகிய இனிய அமுதத்தை அருந்தும் , பிரம்ம தேவனும் திருமாலும் பணிந்து துதி செய்ய விளங்கும் வினாயகக்கடவுளும் முருகக்கடவுளும் எனக்கு திருவருள் செய்ய வேண்டும்!

ஒளிவீசும் ஸ்படிக நிறமுற்று , அடியவர்கள் செய்யும் துதியையே ஆபரணமாக ஏற்கும் சதாசிவ வடிவமாய் சூரியன் போன்ற நிறம் அமைந்த பகவன் சிரோ மூர்த்தியாய் கூறப்பட்டு சாந்தியாதீத பதமாய் விண்ணிடை பொருந்தி அளவிடுவதற்கரிய பஞ்சாட்சரங்களில் இறுதியில் உள்ள யகராஷ்ரமாகிய, ஐந்து தலைகளுடன் கூடி அறிவதற்கு அறியதாய் விளங்கும் ஈசான பிரம்மம் உமாதேவியுடன் அடியேன் பூஜை செய்வதற்கு திருவுளம் இறங்கி என் பாவங்களை அகற்றியருள வேண்டும்! 

பாலசூரிய வடிவமாய் விளங்கி தன்னருள் புரியும் சிவபெருமானின் கீழ் திசை முகமாகி சாந்தீபதமாய் ஆன்மாவாய் வாயுவில் வசிப்பதாய் , பஞ்சாட்சரங்களில் நான்காவதாகிய வாகாராட்சரமாய் நான்கு தலைகளுடன் கூடியமர்வதுமாய் விளங்கும் தற்புருஷ பிரம்மம் நெடிய கண்களையுடைய உமாதேவியுடன் கூடி அடியேன் மலர்தூவி அர்ச்சித்த பூஜைக்கு மனமகிழ்ந்து , என் மன மயக்கத்தை அறவே ஒழித்து மகிழ்ச்சியுடன் திருவருள் செய்ய வேண்டும்! 

அஞ்ஞன கிரி போன்ற ஆதாரம் உடையதாய் ஈஸ்வரனது தெற்கு முகமாகி கொடுமை வாய்த்த அகோர மூர்த்தியாய் வித்தியாப்தமாய் அக்கினியில் பொருந்தியதாய் பஞ்சாட்சரங்களில் மூன்றாவதாகிய சிகாராட்சரமாய் எட்டுத் தலைகளுடன் விளங்குவதாக உள்ள அகோர பிரம்மம் எளியேனுடைய குற்றங்களை மன்னித்து உமாதேவியாருடன் என் பூஜையை ஏற்று மகிழ்ந்து என் பாவங்களையெல்லாம் ஒழித்து திருவருள் புரிய  வேண்டும்.!

குங்கும நிறமுடையதாய் ஈஸ்வரனது வடக்கு முகமாய் பிரதிஷ்டாபதமுடையதாய் ஜலத்தில் விளங்குவதாய் பஞ்சாட்சர்களில் இரண்டாவதாகிய மகாராடசரமாய் பதிமூன்று தலைகளுடன் விளங்கும் வாமதேவ பிரம்மம் உமாதேவியாருடன் பொருந்தி அடியேன் புல்லறிவால் செய்த பூஜைக்கு மனங்களித்து என் பாபமாகிய கோடையை தணித்து அமுதமாரியை பொழிந்து என்னை கடைத்தேற்ற வேண்டும். 

தங்கம் போன்ற வண்ணமுடையதாய் சங்கு குண்டலங்கள் அணிந்த சிவபெருமானின் மேற்றிசை முகமாய், நிவர்த்தி பதமுடையதாய் பூமியில் விளங்குவதாய் பஞ்சாட்சரங்களில் முதல் எழுத்தாகிய நகாராட்சரமாகி எட்டுத்தலைகளுடன் விளங்கும் சத்தியோஜாத பிரம்மம் உமாதேவியுடன் பொருந்தி நான் விதிமுறைப்படி செய்த அர்ச்சனைக்கு அகமகிழ்ந்து என் வினைப்பயனை அறவே ஒழித்து திருவருள் புரிந்து நல்ல பயனை கொடுக்க வேண்டும். 

சிவபெருமானும் உமாதேவியுமாகிய இருவரும் எனக்கு எப்போதும் நற்பயன்களையே வழங்குவார்களாக! குற்றமற்ற வரத அபயகரங்கள் நற்பயன்களை நாள்தோறும் நல்குமாக. அவ்விருவருடைய சிகைகள் யான் விரும்பியவற்றை தந்தருளுமாக. யாவராலும் துதி செய்யத்தக்க அவருடைய கவசங்கள் குற்றமற்ற பயன்களை தந்துவட்டும். அவர்கள் திருவிழிகள் வேண்டிய பயன்களை கொடுக்குமாக. அவர்களுடைய ஆயுதங்கள் நற்பயன்களை அருளுக! 

வாமாதிதவாதி அஷ்ட ருத்திரர்களூம் தத்தம் சக்தியருடன் சிறந்த பயனை வழங்குவாராக . அனந்தனது அஷ்ட வித்தியேஸ்வரர்கள் சக்திகளோடு நற்பயன்களை அளிப்பாராக. பவன் முதலிய எண்மரும் , மாதேவன் முதலிய பதினொருவரும் தத்தம் சக்திகளுடன் நற்பயனை அருளுக. இடபதேவன் தன் எண்ணற்ற பயனை ஈயட்டும். நந்தி, மகாகாளி, சாத்தன், சப்தகன்னியர், வினாயகர் இவர்கள் உயர்ந்த பயன்களை உதவுக. ஜேஷ்டை நற்பயன் தருக. கணாம்பிகை , சதி, மேனை, பார்வதி, உருத்திராணி முதலியோர் மிக்க பயன் தருக. சண்பன், இடபன், பிங்கலன், பிருங்கிவீரன் இவர்கள் எனக்கு மிக்க வல்லமை தருக. கலைமகள், திருமகள், மோகினி, துர்க்கை, உருத்திரர்கள், பிரதமகணங்கள், பூதங்கள் உமாதேவியின் தோழிகள், உருத்திர கன்னிகைகள், சூரியன் முதலிய இவர்கள் ஆவரணத்துடன் நற்பயனை விரைவில் அளிப்பார்களாக. பிரம்மதேவன், சூலப்படை தாங்கிய உருத்திரன், விஷ்ணு முதலியவர்கள் தம் ஆவரணத்துடன் அழியாப்பயன்களை கொடுத்தருள்க. அவர்களது தேவிமார்கள் கெடாத நற்பயன்களை தருவார்களாக.

ஜனகர் முதலான முனிவர்கள் நால்வரும் தட்சன் முதலான பதினோரு பிரம்மாக்களும் நற்பயன்களை கொடுப்பார்களாக. தர்மம், சங்கற்பம், வேதம், இதிகாசம், புராணம், சாஸ்திரங்கள், வித்தைகள், திசைகள், திக்கு பாலகர்கள், சூலம் முதலிய ஆயுதங்கள், ஆகாயத்திலுள்ள கோமாதாக்கள் , வடுகக்கடவுள் நான் விரும்பிய பயனை கொடுத்திடுக. அஷ்டவயிரவர்கள், யோகியர்கள், நாரதன் முதலிய முனிவர்கள் , சாத்தியர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அக்கினிக்கொழுந்து போன்ற சிகைகளுடைய பேய்களீறாகிய தேவ யோனிகள், அசுரகள், அரக்கர்கள், நாகங்கள், கருடர்கள் இவர்கள் நற்பயனளித்திடுக. 

கடல்கள், தீவுகள், நதிகள், ஓடைகள், மலைகள், காடுகள், பசுக்கள், பறவைகள், மரங்கள், கிருமிகள், புவனங்கள், புவனபதிகள், அண்டங்கள்,  அண்டத்தலைவர்கள் பயனளிப்பாராக. வர்ணங்கள், பதங்கள், மந்திரங்கள், தத்துவங்கள், தத்துவங்களில் விளங்கும் தலைவர்கள், பிரம்மாண்டத்தை காக்கும் உருத்திரர்கள், சிவ வித்தை, சிவஸ்தோத்திரம், சிவ புராணம், சிவதர்மம் என்பன எனக்கு மேம்பட்ட பயன்களை தர வேண்டும். சுவேதன் முதல் இலகுளிசன் ஈறாகவுள்ள குரவர்கள் அவரகளுடைய புதல்வர்கள் சைவர்கள் மஹேஸ்வரர்கள், வேதியர் முதலிய வருணத்தவர்கள் சாங்கியம் முதலிய சாஸ்திரத்தின் வழிபட்டவர்கள் இவர்கள் யாவருமே யான் நற்கருமம் செய்ய அருள்புரிவாராகுக. 

சௌரம் முதலிய மதங்களில் உள்ளவர்களும், உயர்ந்த சைவ சித்தாந்த மார்க்கத்தில் ஒழுகியவர்களும், பாசுபதத்தில் இருப்பவர்களும், காபாலிகத்தில் பொருந்தியவர்களும் அடியேன் நற்கருமம் செய்ய கிருபை செய்வார்களாக. உத்தர தட்சிண நெறிகளில் உள்ளோர் ஞானத்தை அருள்வாராக. மோட்சலோகமும் ஈஸ்வரனும் இல்லையென்பவர்களும் செய்த நன்றி மறந்தவர்களும் பாசாங்குதாரர்களும் என்னைச் சேராமல் அகல்வார்களாக. தகுதியுடையவர்கள் அருள்வாராக , நல்லோர் மங்கல் வசனம் கூறுவார்களாக. உமாதேவியாரோடும், வினாயகக்கடவுளோடும், முருகக்கடவுளோடும் விளங்கும் சிவபெருமானே திருவருள் புரிவாயாக!
   

Monday, 21 December 2015

திருவாசகம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! 
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;

பதிவிறக்கம் செய்ய 
உரை 

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

பதிவிறக்கம் செய்ய 
உரை 

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, 
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;

பதிவிறக்கம் செய்ய 
உரை 

`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் 
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Monday, 30 November 2015

சிவமயமே எங்கும் சிவமயமே!

கருவறையில் இருக்கும் மகாலிங்கம் போலவும், உடம்புக்கு உயிர் போலவும் விளங்குவது சிவநாமம். வேதங்களின் மத்தியில் ஜீவரத்தினமாகவும் திகழ்கிறது.பாவத்தை கணப்பொழுதில் காணாமல் போகச் செய்யும் பொருள் ஒன்று இருக்கிறது. அதைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். இரண்டு எழுத்துக்களால் ஆன சிவ என்னும் நாமமே அது. சிவநாமத்தை சொல்ல தகுதி என்ன வேண்டும் என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த யாரும் அதைச் சொல்லலாம். நாக்கு இருந்தால் மட்டும் போதும்.சிவ என்று சொல்லாதவரைக் கண்டால், சிவநாம மகிமையை உணராத இவனுக்கு நாக்கு கொடுத்து பயனில்லை என்று கடவுள் திரும்பி வாங்கிக் கொண்டு விடுவான்.கோயிலுக்குச் சென்று சிவ பெருமானை நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். ஹர ஹர மகாதேவா என்று இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.ஹர ஹர மகாதேவா என்ற நாம ஒலி, இந்த உலகம் முழுதும் நிறையச் செய்ய வேண்டும். இந்த நிலையை அடைந்து விட்டால், உலகிலுள்ள தீய
சக்திகள் யாவும் ஒழிந்து விடும்.நமக்கு கஷ்டம் ஏதும் வந்து விட்டால், உதவி செய்யக் கூடிய யாரையாவது தேடி அலைகிறோம். சிவாய நம என்று சிந்தித்துஇருந்தால் அபாயம் ஏதுமில்லை என பெரியவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

தயாளமும், கருணையும் நிறைந்தவர் சிவன். அறுபத்து மூன்று நாயன்மார்களில்எத்தனையோ பாமர வாழ்வு நடத்திய எளியவர்களும்சிவனருளால் நற்கதி அடைந்துஇருக்கிறார்கள்.அனைவரும் எளிதில் அணுகக் கூடிய சிவபெருமானை நினைத்து, மனம் உருகி கரைந்து கண்ணீர் பெருக்கினால், பிறவி சக்கரத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும்.எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமாக இருப்பவர் சிவனே. உலகிற்கெல்லாம் தாயும்தந்தையுமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை வணங்குகிறேன் என்று மகாகவி காளிதாசர்ரகுவம்சத்தின் முதல் மங்கள ஸ்லோகத்தில் பாடியிருக்கிறார். ஒரே சர்க்கரையால் பல இனிப்புகள் செய்வது போல, ஒன்றாக இருக்கும் சிவமேஉலகிலுள்ள அத்தனைபொருளுமாக ஆகியிருக்கிறது. மனம் பாவச் செயலில்ஈடுபடாமல் இருக்கவும்,முன்வினைப் பாவம் அடியோடு நீங்கவும் எப்போதும் சிவனை தியானிக்க வேண்டும். ஈஸ்வர தியானமே வாழ்வின் நம் அன்றாடப் பணியாக இருக்க வேண்டும்.எருக்கு, தும்பை, ஊமத்தை இந்த மூன்று பூக்களும்சிவனுக்குப் பிரியமானவை. உலகில் எத்தனையோ மலர்கள் இருந்தாலும், மணமோ, விலையோ இல்லாத இந்த மலர்களை விரும்புவது, அவரின் எளிமையைக் காட்டுகிறது.அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையேநற்றுணையாவது நமச்சிவாயவே என்றெல்லாம் அருளாளர்கள் சிவனை திருமுறைகளில் துதி செய்திருக்கிறார்கள். நாமும் அம்மையப்பரான சிவனின்திருவடிகளை எப்போதும் சிந்தித்து நல்வாழ்வு பெறுவோம்.

Thursday, 26 November 2015

குலதெய்வம் என்பது

குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வ...ழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.

பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும். குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை. 

ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது. 

குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.

குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.

அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்.

Wednesday, 25 November 2015

உருத்திராட்சம்

உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தரிக்க வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.
இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். 'ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன்.எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகி உருத்திராட்சங்களாயின' என்றார்.
உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தரித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.
இரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.
இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.
இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரீஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.
அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் அருள் கிடைக்கும் . அதிதேவதை அஷ்டவசு.
இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரி காரம் ஏற்படும்.
பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன்அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால்போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தா¢த்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிப்பு பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.
பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிபோரும் , புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'
என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.