ஈசனுக்கு கண்கொடுத்த கண்ணப்பநாயனார்....
சுதர்சன சக்கரத்திற்காக ஆயிரம் தாமரை மலர்களை கொண்டு சிவபெருமானை பூஜித்தார் மகாவிஷ்ணு. ஆயிரத்திற்கு ஒரு மலர் குறைந்தபோது, தனது கண்ணை பறித்து அதை ஒரு மலராக வைத்து ஈசனை வழிபட்டு சுதர்சன சக்கரத்தைப் பெற்றார். ஆனால் அன்பின் காரணமாக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறைவனுக்காக தனது இரண்டு கண்களையும் இழக்க துணிந்ததால் கண்ணப்ப நாயனார், பக்தியில் உயர்ந்தவராகிப் போனார்.
வேடர் குலத்தில் பிறந்தவர்
வேடர் குலத் தலைவர் நாகன் என்பவருக்கும், அவரது மனைவி தத்தை என்பவருக்கும் பல ஆண்டு தவத்தின் பலனாக பிறந்தவர் கண்ணப்பர். அவருக்கு தாயும் தந்தையும் திண்ணன் என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். சிறுவயதில் சுறுசுறுப்பாக துடுக்குத்தனமாக இருந்தாலும், தன் குலத் தொழிலான வேட்டையாடுதலையும் நன்றாக கற்றுக்கொண்டார் திண்ணன். நாகன் முதுமையை எட்டி விட்டதால் அவரால் முன்போல் வேட்டையாட முடியவில்லை. தலைமை இல்லாததால் பலரும் வன விலங்குகளை வேட்டையாடாமல் விட்டு விட்டனர்.
இதனால் விலங்குகள் பெருகி பயிர்களை எல்லாம் அழித்து வந்தன. இதனால் கலக்கமுற்ற வேடர்கள் அனைவரும் நாகனை சந்தித்து தீங்கில் இருந்து காத்தருள கேட்டுக் கொண்டனர். நாகன், ‘எனக்கு மூப்பு வந்து விட்டது. எனவே எனது மகனை தலைவராக்குகிறேன். அவன் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவான்’ என்று கூறினார். அதன்படியே தன் மகனை வேடர்குல தலைவனாகவும் ஆக்கினார்.
வேட்டையாடுதல்
திண்ணனின் தலைமையில் வேடர்கள் அனைவரும் காட்டில் மிகுந்திருந்த விலங்குகளை வேட்டையாடினர். அதே வேளையில் யானைக் கன்றுகளையும், கருவுற்ற விலங்குகளையும், ஏனைய விலங்குக் குட்டிகளையும் கொல்லக் கூடாது என்ற தருமநெறி தவறாமல் வேட்டையாடினார் திண்ணன். இவ்வாறு ஒரு முறை வேட்டையாடியபோது, பன்றி ஒன்று, யானையைக் காட்டிலும் வேகம் கொண்டு வலையை அறுத்துக் கொண்டு திமிறி ஓடியது.
இதனைக் கண்ட திண்ணன் மற்றும் அவருடன் வந்த காடன், நாணன் ஆகிய வேடர்கள் மூவரும் சேர்ந்து அந்த பன்றியை துரத்திச் சென்றனர். பாய்ந்து சென்ற பன்றியை அதே பாய்ச்சலுடன் துரத்திச் சென்று வீழ்த்தினார் திண்ணன். அவரது வீரச் செயலை நாணனும், காடனும் பாராட்டினர். வெகு தூரம் பன்றியை துரத்தி வந்ததால் மூவருக்கும் பசி ஏற்பட்டது. எனவே இறைச்சியை தீயில் வாட்டி உட்கொள்ள முடிவு செய்தனர். அதற்காக தண்ணீர் தேடினர்.
அன்பு பெருக்கெடுத்து...
அப்போது மலை ஒன்றின் அடிவாரத்தில் நீர் தடாகம் இருப்பதை கண்டனர். அங்கு காடனை தீயில் இறைச்சியை சமைக்கும்படி கூறினார் திண்ணன். பின்னர் நாணன் கூற காளத்தி என்ற அந்த மலையின் மீது குடுமித்தேவர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டார் திண்ணன். நாணனும், திண்ணனும் மலைக்குச் சென்றனர். அங்கு வீற்றிருந்த இறைவனைக் கண்டதும் அன்பு பெருக்கெடுத்து இறைவனையே சிந்தித்தபடி நின்றார் திண்ணன்.
சிவலிங்கத்தின் மீது பூவும், இலையும், அதன் அருகில் அமுதும் படைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி நாணனிடம் கேட்டார் திண்ணன். ‘நானும் உன் தந்தையும் ஒரு முறை இங்கு வந்தபோது, சிவாச்சாரியார் ஒருவர் இங்கு வந்து ஈசனை குளிர்ந்த நீரால் நீராட்டி, இலையும் பூவும் சூட்டி, உணவு படைத்து, சில மொழிகளை சொல்லிச் சென்றார். அவர்தான் இதுபோன்று செய்திருப்பார்’ என்று கூறினான்.
இறைவனுக்கு இவைதான் செய்ய வேண்டும்போல் என்று திண்ணன் நினைத்துக் கொண்டார். அதையே இறைவனுக்கு தானும் செய்ய எண்ணினார். ஆனால் இறைவனை பிரிந்து செல்ல அவர் மனம் மறுத்தது. ஒருகணமும் பிரியாமல் அங்கேயே இருக்க வேண்டும் என்று அவரது சிந்தனையில் தோன்றியது. இருந்தாலும், இறைவனுக்கு பசிக்குமே, அவருக்கு உணவு படைக்க வேண்டுமே என்று எண்ணி அங்கிருந்து அகல முற்பட்டார்.
இறைச்சி அமுது படைத்து...
மனதை கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றார். விரைந்து சென்று காடன் தீயில் வாட்டி சமைத்து வைத்திருந்த பன்றியின் இறைச்சியில் தரமான இறைச்சியை தேர்ந்தெடுத்தார். அவை சுவையாக இருக்கிறதா என்று தன் பல்லால் கடித்து பார்த்தார். தேர்ந்தெடுத்த இறைச்சியை ஒரு இலையில் எடுத்துக் கொண்டார். அருகில் இருந்த தடாகத்தில் இருக்கும் தூய நீரை வாயில் நிரப்பிக் கொண்டும், மரத்தில் இருந்து மலர்களை பறித்து தன் தலையில் சொருகிக் கொண்டும், மலை மீது இருக்கும் ஈசனை நோக்கி பாய்ந்து சென்றார்.
அங்கு இறைவன் மீது இருந்த மலர்களை, கையில் இறைச்சி இருந்ததால் காலைத் தூக்கி செருப்பால் அகற்றினார். வாயில் கொணர்ந்து வந்திருந்த நீரால், இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தொடர்ந்து இறைவனுக்கு இறைச்சியை அமுது படைத்து, ‘இறைவா! இது தேனினும் இனிமையான சுவை கொண்ட இறைச்சி. நானே அதன் சுவையை பார்த்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்தேன். இதனை உண்டு அருள வேண்டும்’ என்று வேண்டினார்..
இதனைக் கண்ட நாணன், ‘திண்ணா! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?. நாம் இங்கிருந்து செல்ல வேண்டும் வா!’ என்று அழைத்தும் அவரிடம் எந்த சலனமும் இல்லை. அவரது கண்கள் இறைவனின் கண்களோடு கலந்திருந்தது. பலமுறை அழைத்தும் பலன் இல்லாததால், இருப்பிடம் சென்று திண்ணனின் தாய், தந்தையரிடம் கூறி இங்கு அழைத்து வருவது என்று நாணனும், காடனும் புறப்பட்டுச் சென்றனர்.
சிவாச்சாரியார் அதிர்ச்சி
அங்கேயே இருந்த திண்ணன், இரவில் இறைவனுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக வில்லேந்தி காவலுக்கு நின்றார். அதிகாலையில் பறவைகளின் சத்தம் கேட்டு வைகறை புலர்ந்ததை உணர்ந்தார். இறைவனுக்கு அமுது படைக்க வேண்டும் என்று எண்ணியவர், மலையின் மீதிருந்து கீழே இறங்கி இறைச்சிக்காக மான், பன்றி போன்றவற்றை வேட்டையாட புறப்பட்டார்.
அந்த நேரத்தில் வழக்கம்போல் காலையில் இறைவனுக்கு பூஜை செய்ய வரும் சிவாச்சாரியார், இறைவனின் அருகில் இறைச்சியும் எலும்பும் கிடப்பதைக் கண்டு கலங்கினார். ‘இறைவா! இது என்ன சோதனை’ என்று உருகி அவற்றை அகற்றி, சுத்தமான நீரால் இறைவனை நீராட்டி மலர் சூட்டி அமுது படைத்து வழிபட்டுச் சென்றார்.
சிவாச்சாரியார் சென்றதும் இறைச்சியை சமைத்துக் கொண்டு வந்த திண்ணன் அதனை முன்போலவே இறைவனுக்கு படைத்து அமுது செய்ய வேண்டினார். இது நாள்தோறும் நடைபெறும் வழக்கமாயிற்று. சிவாச்சாரியார் காலையில் வந்து இறைச்சியை அகற்றி அமுது படைப்பதும், திண்ணன் இறைச்சியை அமுது படைப்பதுமாக நாட்கள் சென்றன.
இதற்கிடையில் நாகன் தன் மகனை தேடி காளத்தி மலைக்கு வந்தார். ஆனால் அவருடன் செல்ல திண்ணன் மறுத்து விட்டார். நாகனும் தன் நிலையை நொந்தபடி அங்கிருந்து அகன்றார்.
கனவில் தோன்றிய ஈசன்
ஒரு நாள் இரவு சிவாச்சாரியார் உறங்கும் முன்பு இறைவனை நினைத்து, ‘ஐயனே! உனக்கு இறைச்சியை படைத்து அபவாதம் செய்பவர் யார் என்று தெரியவில்லை. நாள்தோறும் நடைபெறும் இந்த கொடுஞ்செயலை நீதான் தடுக்க வேண்டும்’ என்று வேண்டினார். அப்போது அவர் கனவில் தோன்றிய ஈசன், ‘அன்பனே! என்பால் கொண்ட அன்பால் எனக்கு படைக்கப்படும் அமுது அது. அதனை நான் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். அந்த பக்தனின் பக்தியை நாளை நீ மறைந்திருந்து பார்’ என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை சிவாச்சாரியார் ஈசனுக்கு தான் செய்யும் கடமைகளை செய்து விட்டு அருகில் இருந்த மரத்தின் பின் மறைந்து கொண்டார். சிறிது நேரத்தில் திண்ணன் சுவைமிகு இறைச்சியுடன், தலையில் மலருடனும், வாயில் நீருடனும் அங்கு வந்தார். பக்தனின் பக்தியை சிவாச்சாரியாருக்கு உணர்த்த எண்ணிய சிவன், தன் திருமேனியின் கண் பகுதியில் இருந்து ரத்தம் வழியச் செய்தார். இதனைப் பார்த்து பதறிப் போன திண்ணன், ‘இறைவா! என்ன இது? இந்த கொடுஞ்செயலை செய்தவன் யார்? அவன் எங்கிருக்கிறான்? இப்போதே அவனை கொன்று தீர்க்கிறேன்’ என்று கர்ஜித்தவர் அங்கும் இங்கும் ஓடித் தேடினார். ஆனால் எவரையும் காணவில்லை. சிவலிங்கத்தில் வழிந்த ரத்தத்தை தன் கையால் துடைத்தார். அது நிற்கவில்லை. இறைவனைக் கட்டிக் கொண்டு அழுது அரற்றினார்.
தன் கண்ணை கொடுத்து...
இறுதியில் இறைவனின் கண்ணில் இருந்து வழியும் குருதி நிற்க மருந்து தேடிச் சென்று கொண்டு வந்து பூசினார். ஆனாலும் ரத்தம் வழிவது நிற்கவில்லை. அப்போது திண்ணனுக்கு, ‘ஊனுக்கு ஊன் உற்ற நோய் தீர்க்கும்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அதன்படி ‘என்னுடைய கண்ணைக் கொடுத்து என் இறைவனின் கண் நோயை நீக்குவேன்’ என்று சூளுரைத்தவர், ஒரு அம்பை எடுத்து தன்னுடைய ஒரு கண்ணை பறித்து ரத்தம் வழிந்த இடத்தில் பொருத்தினார். உதிரம் வழிவது நின்று விட்டது.
கண் பறிபோன வலியே தெரியாதவராக ஆனந்த கூத்தாடினார். அங்கும் இங்கும் ஓடி அகமகிழ்ந்தார். ஆனால் அது நிலைக்கவில்லை. இறைவனின் மற்றொரு கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனைக் கண்டு வேதனையடைந்தாலும் மறுகணமே, ‘இதற்கான மருந்து எனக்கு தெரிந்து விட்டது. என்னிடம் இன்னும் ஒரு கண் உள்ளது. அதையும் கொடுத்து இறைவனின் கண் நோய் நீக்குவேன்’ என்றபடி அந்த கண்ணையும் அம்பைக் கொண்டு வெளியே எடுக்க முயன்றார்.
அப்போது, ‘நிறுத்து கண்ணப்ப!... நிறுத்து கண்ணப்ப!’ என்று திண்ணனை தன் கரத்தால் தடுத்து நிறுத்தினார் ஈசன். இவை அனைத்தையும் மறைந்திருந்து கண்டார் சிவாச்சாரியார். வானவர்கள் பூமழை பொழிந்தனர்.
காளத்தியப்பர், ‘கண்ணப்பா! என் அருகில் இருந்து என்றும் மாறாது நிற்பாய்’ என்று அருள்புரிந்தார். இதைவிட சிறந்த பேறு எது? காளத்தியப்பரின் அருகில் கண்ணப்பர் நிலைபெற்று நின்றார்.
அன்பை விட சிறந்த பக்தி எதுவும் இல்லை. பிறரிடம் செலுத்தும் அன்பு உன்னதமானது. அதே அன்பை இறைவனிடம் செலுத்தும் போது அது உயர்வு பெறுகிறது. நம்மையும் உயர்த்துகிறது...