Friday, 13 November 2015

காரைக்கால் அம்மையார்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ் செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே. தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க தனதத்தன் றரும்புனித வதியார் மாவின் செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி யம்மையே யெனநாத னப்பா வென்று பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற் புனிதனட மனவரதம் போற்றி னாரே.

சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார்.

போயபின், பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம்பண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். மனைவியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்தது.

அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான். மனைவியார் அதைக்கேட்டு, தமக்குத் திருவருள் உதவிய திறத்தை வெளிப்படுத்துவது தகுதியன்று என்று நினைந்தமையால் நிகழ்ந்ததைச் சொல்லமாட்டாதவரும், கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் அதனைச் சொல்லாது விட மாட்டாதவருமாய் வருந்தி நின்று பின் நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, "நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி அவருடைய திருவருளினாலே அழைத்துத் தா" என்றான். புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, "இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்" என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். அவருடைய சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, அவனிடத்திற் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, கவலை கூர்ந்து, புனிதவதியாரைத் தாமே அவனிடத்திற்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று நினைந்து, சிவிகையில் ஏற்றிக்கொண்டு சென்று, அவனிருக்கின்ற நகரத்திற்குச் சமீபித்து, தாம் புனிதவதியாரைக் கொண்டுவந்தமையை அவனுக்கு ஆள் அனுப்பித் தெரிவித்தார்கள். அவன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, "அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, "நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை" என்றார்கள். அதற்குப் பரமதத்தன்" இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன். இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், நான் பெற்ற இந்தக் குழந்தைக்கு இவர் பெயரைத் தரித்தேன். அதுபற்றியே இவருடைய திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்றான், அதுகேட்ட சுற்றத்தார்கள் 'இது என்ன ஆச்சரியம்" என்று திகைத்து நின்றார்கள். புனிதவதியார் கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, "சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்று, அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, எம்போலிகள் புனிதவதியாருடைய திடப்பத்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தாராயின், நாம் எவ்வளவு ஆச்சரியம் அடைதல் வேண்டுமென்று சிந்திக்கச் செய்யும் பொருட்டுத் தாம் ஆச்சரியமுடையவராகி, அவரது பத்தி மகிமையை உயர்வொப்பில்லாத பரமசிவனுடைய திருவாக்கினாலே நமக்கு உணர்த்துவித்து நம்மை உய்விக்கத் திருவுளங்கொண்டு, அக்கடவுளை வணங்கி நின்று, "சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை" என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்' என்றார். பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, "அம்மையே" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்

Wednesday, 11 November 2015

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!

சர்வம் சிவமயம் என்பார்கள். இந்தத் தத்துவத்தை உணர்த்தும் வகையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உத்திரத்தில் சிவலிங்க ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிராகாரத்தில் முக்குறுணி விநாயகர் தனிச் சந்நிதியில் வீற்றிருப்பார்.

இந்த இடத்தின் மேற்கூரையில் ஓர் ஒளிப்பிரவாகத்தின் நடுவில் சிவலிங்கம் வரையப்பட்டிருக்கும். நாம் எங்கிருந்து பார்த்தாலும் சிவலிங்கம் அமைந்திருக்கும் பீடம் நம்மை நோக்கித் திரும்பும் வகையில் இருப்பதுதான் இந்த லிங்க ஓவியத்தின் சிறப்பு. அதனாலேயே இதனைச் சுழலும் லிங்கம் என்று அழைக்கின்றனர். இந்த ஓவியத்தையொட்டி ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை அவ்வைப் பிராட்டி கயிலாயத்துக்குச் சென்றபோது, சிவபெருமான் இருக்கும் திசையை நோக்கிக் காலை நீட்டி உட்கார்ந்தார். உடனே பார்வதி, உலகை ஆளும் ஈஸ்வரனை நோக்கிக் காலை நீட்டலாமா அவ்வையே என்று கேட்டாராம்.

அதற்கு அவ்வை, “அம்மையே ஈஸ்வரன் இல்லாத திசை எது?” என்று கேட்டாராம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதை விளக்கும் ஓவியம் இந்த சுழலும் லிங்கம் என்கின்றனர் பக்தர்கள்

Sunday, 8 November 2015

திருவாலங்காடு

விழுதுகள் பரவி. காய்ந்த சருகுகள் உதிர்ந்து, அடர்ந்து படந்திருந்த அந்த ஆலங்காட்டில் ஒரு குளத்துக்கு அருகே சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி துவங்கியது. 

வானத்தில் தோன்றும் இடி மின்னலைப் போல் இருவரும் மிக பயங்கரமாக ஆடிக்கொண்டே இருக்க, ஒரு இடத்தில் இடது காதில் சிவன் அணிந்திருந்த குண்டலம் கழன்று கீழே விழ, நடனத்தை நிறுத்தாமல் சிவன் தன்னுடைய ஒரு காலால் அதனை எடுத்து காதில் மாட்டிய அந்த நிகழ்வை பார்த்த காளி, ஒரு நிமிடம் திகைப்புற்று நின்று சிவனைப் பணிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். 

சிவன் இருக்கும் இடத்தை காலால் மிதிக்கக்கூடாது என்பதற்காக தன்னுடைய தலையால் இந்த இடத்திற்கு நடந்து வந்து இந்த நடனத்தை காண வந்தார் 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் "காரைக்கால் அம்மை". 

நடராஜரின் அனைத்து சிலைகளிலும் அவரின் காலுக்கடியில் கையில் தாளக் கருவியை இசைத்தவாறு தவறாமல் இடம் பிடித்திருப்பார் இந்த அம்மை. 

சிவன் நடனமாடிய பஞ்ச சபைகளில் இரத்தின சபையான "திருவாலங்காடு" (திரு+ஆலங்காடு) என்ற ஊர் தேவார பாடல் பெற்ற கோயில்களில் மூவர் பாடிய கோயில்.

"பழையனூர் நீலியை" தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது, சிறு வயதில் நாம் திகிலுடன் கேட்ட பேய் கதைகளில் நீலிப் பேயும் முக்கிய பங்கு வகிக்கும், 

அனைத்து பேய் கதைகளும் வாய் வழிக் கதைகள் தான், ஆனால் இந்த பழையனூர் நீலி பேய் குறித்து தமிழ் நூல்கள் கூட குறிப்பு வழங்குகின்றது என்பது எவ்வளவு ஆச்சர்யமான செய்தி!. அப்படி என்ன தான் நடந்தது இந்த பழையனூரில்?

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அந்த பயங்கர சம்பவம் நடந்தேறியதாக அந்த பெயர்ப் பலகை அறிவித்தது.

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. 

வணிக விஷயமாக வட நாட்டிற்கு செல்லும் போது அங்கு ஒரு பெண்ணை மணந்துகொள்வதால் தன் முதல் மனைவி நீலியை கொன்றுவிடுகிறான் அந்த வணிகன். 

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். தன்னுடைய மறு ஜென்மத்தில் ஒருநாள் இந்த பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் வந்த போது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பிக்கிறாள். 

பயந்து ஓடி வந்த அவனை 70 பேர் கொண்ட பழையனூர் வேளாளர்கள் சபை அன்று இரவு அவர்கள் ஊரில் பத்திரமாக தங்க அவனுக்கு அடைக்கலம் அளித்தது, 

பழிவாங்கியே தீர வேண்டும் என்றெண்ணிய நீலி அழகான பெண் உருவமாக தன்னை மாற்றிக்கொண்டு கையில் ஒரு குழந்தையையும் ஏந்திக் கொண்டு அந்த ஊரை வந்தடைந்தாள் "இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று "நீலிக் கண்ணீர்" விட்டு கதறினாள்.

(போலியாக அழுபவர்களை "நீலிக் கண்ணீர் வடிக்காதே" என்று கூறுவது இது தான்). 

அந்த 70 வேளாளர்கள் சபை அந்த இரவு அவனோடு அவளை தங்க சம்மதித்தது.

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. இவள் ஒரு பேய்! என்னை பழி தீர்ப்பதற்காக வந்திருக்கிறாள் என்று கூறி கதறினான்” 

ஆனால் அந்த ஊர் சபை கேட்கவில்லை, உங்கள் உயிரை காக்க நாங்கள் 70 பேர் இருக்கிறோம். உங்கள் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம், உனக்கு ஏதேனும் நேர்ந்தால் எங்கள் உயிரை விட்டு விடுகிறோம் என்று அங்கிருந்த கோயில் ஒன்றில் இறைவன் முன் சத்தியம் செய்து தந்து அவர்களை ஒரே வீட்டில் தங்கவைத்தனர், 

விடிந்ததும் வணிகன் பிணமாகக் கிடந்ததை பார்த்த வேளாளர்கள் வந்தது பேய் என்பதை அப்போது தான் உணர்ந்தனர். 

அவனது உயிர் போவதற்கு காரணமாக இருந்த தாங்கள் உயிரோடு இருக்ககூடாது என்றெண்ணி எழுவது பேரில் 69 பேர் தீயில் பாய்ந்து உயிரை விட்டனர்! 

வயல் வேலையாக கழனிக்கு சென்ற ஒருவன் இந்த செய்தி கேட்டு ஏர் கலப்பையால் கழுத்தை அரிந்து கொண்டு அங்கேயே உயிரை விட்டுவிடுகிறான்.

அந்த வணிகன் உயிரைக் காப்பதாய் அவர்கள் நின்று சத்தியம் செய்து கொடுத்த "சாட்சி பூதேஸ்வரர்" கோயில் இன்றும் உள்ளது. 

அதற்கு நேர் எதிராக 20 அடி தூரத்தில் தங்களின் வாக்கை காப்பாற்ற முடியாமல் தீப்பாய்ந்த அந்த 69 வேளாளர்களின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு பழங்காலத்தில் எழுப்பப்பட்ட நினைவு மண்டபம் ஒன்று உள்ளது, 

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தீப்பாய்ந்த அந்த 69 பேரையும் புகழ்ந்து சோழன், சேரன், பாண்டியன் ஆகிய மூன்று பேரும் இங்கு வந்து அவர்களின் தியாகத்தை போற்றி பாடியிருகிறார்கள் (யார் என்பதற்கு வரலாற்று சான்று இல்லை), 

திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் “முனை நட்பாய் வஞ்சப்படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனூர்” என்று இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளார். 

பெரிய புராணம் எழுதிய சேக்கிழாரும் தன்னுடைய நூலில் இந்த நீலிக் கதையை விரிவாக எழுதி இருக்கிறார். 

பழையாறை அரண்மனையின் மேல் மாடியில் தன்னுடைய அறையில் ராஜேந்திர சோழன் தங்கி இருந்த போது, திருவாலங்காடு கோயிலுக்காக இந்த பழையனூர் கிராமத்தை நிவந்தமாக கொடுத்தார் என்று திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றது. 

தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்ட சோழன் சேரன் பாண்டியன் கூட பகையை மறந்து வந்து போற்றிய இடம். 

எல்லையில் இருக்கும் காளியை வணங்கியே சிவ வழிபாடு என்பது ஐதீகம். 

எந்த பெண்ணுக்கும்/உயிருக்கும் நான் அறிந்தோ அறியாமலோ தீங்கு செய்ய மாட்டேன் என்று சாட்சி பூதேஸ்வர் முன் உறுதி கொள்ளுங்கள். கண்ணீரை துடைக்க கரம் நீட்டுங்கள். பெண்கள் கண்ணீர் அமிலம். அது அடாது செய்பவர்களை அழிக்கும் ஆனால் கண்ணீரை பரிகசிக்கும் நீலி உங்களுடன் இருப்பாள்.

சித்தர்கள் நாடிய "ஒரு கோடி' !!!

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கோடி கிராமத்தில் ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவுக்கு உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட சிவன் கோயில் உள்ளது.

விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியில் இருந்து பிரிந்து 5 கி.மீ. சென்றால் வரும் ஒரு அழகிய கிராமம் ஒரு கோடி. இங்கு மொத்தம் 230 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆயிரத்துக்கும் குறைவான மக்களை கொண்டது இக் கிராமம். நெல் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது.

இங்குள்ள பழமை வாய்ந்த சிவாலயத்துக்கு ஒரு கோடி சித்தர்கள்வரை வந்து வழிபட்டு, தவம் செய்துச் சென்றுள்ளனராம். அதனால்தான் இக் கிராமம் "ஒரு கோடி' என்று அழைக்கப்படுவதாக அதன் ஊராட்சித் தலைவர் அய்யனார் கூறினார்.


தற்போது அந்த சிவாலயம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சிவாலயத்தில் பழைமை வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. கோயிலுக்கு முன்புறம் எல்லைபிடாரி அம்மன் சிலை உள்ளது. கோடிவிநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகர், குருபகவான், கொற்றவை ஆகிய சிலைகளும் உள்ளன.

இங்குள்ள பல சிலைகள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்பு கோயில் அருகே நிறுவப்பட்டுள்ளதாகவும் கோயிலின் உள்ளே பல்வேறு அரிய வகை ஓலைச் சுவடிகள் இருந்ததாகவும், நாளடைவில் அவை காணாமல் போயும், பலரால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் இக் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இக் கோயில் மூலவர் ஸ்ரீமுக்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர். ஆனால் இக் கோயில் மூலவரை "ஸ்ரீ ஓலை படித்த நாயகி உடனுறை கோடி கொடுத்த நாதர்' என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இதனால் இங்கு ஓலைச் சுவடிகள் இருந்தது என்ற மக்களின் கூற்று உண்மையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

கோயிலில் நுழைவதற்கு பக்கவாட்டில் வாயில் இருந்தாலும் மூலவருக்கு நேரே ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கக் கூடிய மிகச்சிறிய வாசல் உள்ளது. இதுதான் கோயில் வாசல் என்றும் உலகிலேயே மிகச் சிறிய வாசல் உள்ள கோயில் இது என்றும் மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவனிடம் கேட்டபோது, இக் கோயிலில் உள்ள சிலைகள் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் இக் கோயில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலில் கொற்றவை, பேச்சியம்மன், மூத்ததேவி ஆகிய சிலைகள் சிற்பங்கள் போல் உள்ளன.

இக் கிராமத்துக்கு ஒரு கோடி என்று பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஒரு கோடி என்ற எண் அந்த காலத்தில் பயன்பாட்டில் இல்லை. அதனால் எண்ணிக்கையை வைத்து இந்த பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றார்.

தங்கத்தேருடன், புதையல்!

சிவாலயம் அருகில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் உள்ளே தங்கத் தேருடன் கூடிய புதையல் இருந்ததாகவும், கல்களை கிணற்றுக்குள் வீசினால் உலோகத்தின் மேல் விழுவதுபோல் வினோத சத்தம் வந்ததாகவும், தற்போது எந்த சத்தமும் அந்த கிணற்றில் வரவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். புதையல் எடுக்கப்பட்டுவிட்டதா, அல்லது மண் மேவிவிட்டதா என்று தெரியவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன் ???

¤ சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்.

¤ சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.
சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர்.
`
¤ அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே
தியானத்தில் இருப்பவர். எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை
கலைப்பது போன்றது.
`
¤ எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். 
.
¤ எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.
இதுவே முறையாகும்.,

Monday, 2 November 2015

சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்

சக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. கீழே உயர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

சிங்கம் – திருநல்லூர்
யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி
காளை – திருவையாறு
பசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்
குதிரை – சீயாத்தமங்கை
ஆடு – திருவாடானை
பன்றி – சிவபுரம்
கழுதை – கரவீரம்
குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்
முயல் – திருப்பாதிரிப் புலியூர்
நாரை – நாரையூர், மதுரை
கரிக்குருவி – மதுரை, வலிவலம்
மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்
கருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி
நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்
வண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்
தேனீ – நன்னிலம்
ஆமை – திருமணஞ்சேரி
எறும்பு – திருவெறும்பூர்
பாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்
சிலந்தி – ஆனைக்கா
எலி – திருமறைக்காடு
ஈ – திருஈங்கோய் மலை