Wednesday, 21 December 2016

சிவாலயங்களை வழிபட வேண்டிய முறைகள்

1. நீராடி தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து முடிந்தால் ருத்ராட்சமும் அணிந்து செல்ல வேண்டும்.

2. மலர், தேங்காய், பழம், பூ, சூடம் ஆகிய இவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

3. கோபுரத்தைக் கண்டவுடன் இரு கைகூப்பி வணங்க வேண்டும்.

4. நமச்சிவாய ஐந்தெழுத்தை மனதில் ஜபித்தவாறே செல்ல வேண்டும்.

5. தல விநாயகரைத் தரிசித்துக குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

6. பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.

7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிச் சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும் சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.

8. திருநீற்றினை இருகையால் பணிவுடன் பெற்றுக்கீழே சிந்தாது அணிந்து கொள்ள வேண்டும்.

9. ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.

10. தரிசிக்கும் காலத்தில் சந்நிதிகளுக்கு ஏற்ப துதிப் பாடல்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும்.

11. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும்.

12. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து பின் அங்கிருந்து புறப்பட்டுச் சிவ சிந்தனையோடு செல்ல வேண்டும்.
[11/26, 1:43 AM] ‪+91 97893 99378‬: சிவ வணக்கம் முத்து அய்யா.

இந்த புலனம் "உலகிற்கு சைவத்தை அறிவித்து அனைவரும் சிவத்தை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கோடு அவன் அருளால் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இதில் அனைத்து அடியார்களின் சைவ பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அய்யா.

தாராளமாக அனைத்து அடியார் பெருமக்களும்  தாங்கள் சைவ கருத்துகளை பதிவிடலாம் அனுமதி தேவை இல்லை.

"அடியார் பெருமக்களுக்காவே புலனம்"

சிவ சிவ

Sunday, 18 December 2016

அண்ணாமலை

​அண்ணாமலையாரும் அறியாத செய்திகளும்​

​ஆமாம் பினை வந்து அணையும் சாரல் அண்ணாமலை​ என்று நம் சம்பந்தப் பெருமான் குறித்தருளும் திருவண்ணமலை, உலகின் தொண்மை வாய்ந்த நகரங்களில் ஒன்று

​நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்​ என்று தேவரம் குறிக்கும் அண்ணாமலையார்  நாம் உய்யும் வண்ணம் சன்னதி கொண்டுள்ள தலம் இது

​சோணசைலம், சோணகிரி, சோணாசலம், அருணாசலம், அருணகிரி, அருணை​ உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் இத்தலத்தில் ​சிவகங்கை, உத்தரதீ்த்தம், சக்கரதீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகிய தீர்த்தங்களுடன் கிரிவலப்பாதையிலும் நகரிலுமாக 360 தீர்த்தங்கள்​ அமைந்துள்ளன

மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களிலும் ஸ்காந்தபுராணம் உள்ளிட்ட வடமொழி புராணங்களிலும் ​மணிமேகலை சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்கத்தமிழ் நூல்களிலும்​ அருணையம்பதியின் மாண்பு பேசப்பட்டுள்ளது

​ஆறு பிரகாரங்கள் என்னும் சுற்றுப்பாதைகளையும், ஒன்பது கோபுரங்களையும்​ கொண்டு இருபத்து நான்கு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து ஈடும் எடுப்புமாக காட்சி அளிக்கும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை

​பதினோறு நிலைகளுடன் 217 அடி உயரம் உள்ள இவ்வாலயத்தின் இராஜகோபுரம் கிபி 1516 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட​
இக்கோபுரம் காண்போர் விழிவிரியும் வண்ணம் உயர்ந்து நிற்கும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ?!

​147 சிற்றாலயங்கள், 22 விநாயகர் சன்னதிகள், 306 மண்டபங்கள், 43 செப்புத்திருமேணிகள், 119 படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்​ என எண்ணிலிச் சிறப்புகளை பெற்ற கோயில் அண்ணாமலையார் கோயில்

ஐம்பூதங்களில் நெருப்பு தலமாகவும் ஆறு ஆதரங்களில் மணிப்பூரகத் தலமாகவும் நினைக்க முக்தி தரும் தலமாகவும் 22 நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்றாகவும் விளங்குவது திருவண்ணாமலை

இங்கு மலையே லிங்கம், மலையே சிவம்🙏🏻
​கடல் மட்டத்தில் இருந்து 2668 அடி உயரத்தில் கொடுமுடியை கொண்ட திருவண்ணாமலை ஐந்து சிகரங்களை கொண்டது​

பாக்கர் என்னும் மேலைநாட்டு அறிஞர் ​இம்மலை பலகாலங்களுக்கு முன்பு பெரும் நெருப்பு உருவமாக இருந்துள்ளது​ என்று ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்

பால் பிரண்டன் என்னும் அறிஞர் லெமூரிய கண்ட நிலப்பரப்போடு ஒப்பிடத்தக்க பழமை வாய்ந்தது திருவண்ணாமலை என்கிறார்

கார்பன் ஆய்வின் படி கணித்ததில் இம்மலையின் வயது ​260 கோடி ஆண்டுகளாக இருக்கலாம்​ என்னும் நவீன அறிவியல்

பல காலங்களுக்கு முன்பு தீமலையாக இருந்திருக்கலாம் இதன் குழம்பிலிருந்து தக்காண பீடபூமி உண்டாயிருக்கலாம் என்றும் கூறுகிறது

நவீனம் எரிமலை என்று கண்ணை மூடிக்கொண்டு கணக்கு போட  ​கோள்நாக அணையானும் குளிர் தாமரையானும் காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான்​ என்று பாடி இறைவன் தீயாக நின்றதை நினைவுக் கூறுகிறார் நம் சம்பந்த பெருமான்

​பூவார் மலர் கொண்டு​ எனத்துவங்கும் பதிகத்தில் அண்ணாமலையின் ஏழாம் நூற்றாண்டு காட்சியை அழகுற விளக்குவார் புகலிவேந்தர்

மலையின் மீது ​குகை நமசசிவாயர் ஆலயம், விருபாஷி குகை, கந்தாஸ்ரமம், உண்ணாமுலையம்மன் முலைப்பால் தீர்த்தம், ஆலமரக்குகை, சடைச்சமிகள் குகை​ ஆகியன தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்கள்

​மலைவலம் வருதல் மிகச்சிறந்த வழிபாடு​ இன்று அடியார்கள் கிரிவலம் வரும் பதினான்கு கிமீ பாதை பாண்டியர்களின் காலத்தில் செப்பனிடப் பட்டதால் அதற்கு ​விக்கிரம பாண்டியன் ஏழாம் வீதி​ என்று பெயர்

இன்று பலரும் நடந்தே மலைவலம் வருகிறார்கள் என்றாலும் மலையை ​அங்க பிரதட்சினம், அடிப்பிரதட்சினம், தவழ் பிரதட்சினம், சர்வாங்க சரீர பிரதட்சினம், வழுவு பிரட்டு பிரதட்சினம், அடிதாண்டு பிரதட்சினம்​ என்கிற வகையிலும் மலைவலம் வந்துள்ளனர் முந்தய நூற்றாண்டு மக்கள்
அண்ணாமலையார் சன்னதிக்கு நேர்பின்னே மலையின் பின்பு இருக்கும் சன்னதி ​திருநேர் அண்ணாமலை​ எனப்படும்

கிரிவலப்பாதையில் ​கௌதம முனிவர் ஆசிரமத்தின் எதிரில் இருந்து பார்த்தால் மலையின் மூன்று சிகரங்களை ஒரு சேர பார்க்கலாம்​ திரிமூர்த்தி தரிசனம் என்னும் இவ்விடத்தில் மண்டியிட்டு வணங்க வேண்டும்

கிரவலபாதையில் இருக்கும் ​அடி அண்ணாமலை​ என்னும் இடம் உண்மையில் அணி அண்ணாமலை ஆகும். இவ்விடத்தில் இருந்து பார்த்தால் மலையின் ஐந்து சிகரங்களையும் ஒருசேர காணலாம்

இறைவனின் ஐந்து முகதரிசனமாக காட்சி தரும் மலையை இவ்விடத்தில் விழுந்து வணங்க வேண்டும்

அட்ட திக்கு பாலகர்கள் வழிபட்ட லிங்கங்கள், பதினாறு விநாயகர் சன்னதிகள் பதினேழு முருகன் சன்னதிகள், பாத மண்டபங்கள் இரண்டு நந்தி மண்டபங்கள் எட்டு உள்ளிட்ட கணக்கிலடங்கா புண்ணிய கோயில்களும் கிரிவலப் பாதையில் உண்டு

​சமயக்குரவர்கள் நால்வரும் பாடிப்பரவிய திருவண்ணாமலையில்​  அருணகிரிநாதர், சேஷாத்ரி நாதர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், தேசிக பரமர், அம்மணி அம்மாள், விருபாட்சி முனிவர், பாணிபாத்திரர், இரமணர், நாராயணகுரு, விசிறி சுவாமிகள் உள்ளிட்ட எண்ணற்ற அருளாளர்கள் வழ்ந்துள்ளனர்

ஆலயத்தில் சித்திரை மாதம் பவுர்ணமி பிரம்மோற்சவம் பங்குனி திருக்கல்யாணம், மாசி வல்லாளன் திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா திருவெம்பாவை திருவிழா திருவூடல் திருவிழா ஆகியன கொண்டாடப் படுகின்றன

​அபித குஜாம்பாள்​ என்னும் ​உண்ணாமுலையம்மன்​ தனிசன்னதி கிபி பனிரென்டாம் நூற்றாண்டில் எடுக்கப் பெற்றது
​உண்ணாமுலை நாச்சியார் காமக்கோட்டம்​ என்று இவ்வாலயத்தை கல்வெட்டுகள் குறிக்கின்றன

கோயில் வரவு செலவுகளுக்கு, பூசைகளுக்கு என நிலம் பொன் கால்நடைகள் வழங்கிய ஏராளமான சோழர் கல்வெட்டுகள் இங்கு உண்டு புகழ்பெற்ற அனைத்து சோழ மன்னர்களின் நேரடி கல்வெட்டுகளையும் இவ்வாலயம் கொண்டுள்ளது, தவிர பல்லவர், பாண்டியர், விஜயநகரர், நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகளும், ஊர் சபையோர் வேளாளர் வணிகர் குழுக்களின் நிவந்த கல்வெட்டுகளையும் கொண்டுள்ளது

​மதுராந்தக சோழ வளநாட்டு பெண்ணை வடகரை திருவண்ணாமலை​ என்றும் ​இராஜராஜ சோழவள நாட்டு வானக்கோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டு அண்ணாமலை​ என்று கல்வெட்டுகள் இவ்வூரை பலவாறு குறிக்கின்றன

வீரராகவன் மதில் என்பது போன்ற பல புதிய பெயர்களை உடைய மதில்கள், பிரமநாயகன் என்பது போன்ற பல மடங்களும் இருந்துள்ளன

பல்லவ குல அரசி ஒருவர் எடுத்த ​நங்கையாழ்வார் ஈஸ்வரம்​ என்னும் கோயிலை கல்வெட்டுகள் அடையாளம் காட்டுகின்றன

மங்கையற்கரசியார் என்னும் பெண் தன் நகைகளை விற்று திருக்குளம் தூர்வாரிய செய்தி நம்மை நெகிழ வைக்கிறது

ஆலயத்தின் மிகமுக்கிய உற்சவமான கார்த்திகை திருநாளில் மலையின் மீது ​3500 கிலோ நெய்யில் ஆயிரம் மீட்டர் நீளம் உள்ள திரி கொண்டு​ தீபம் ஏற்றப்படும் இத்தீப நெய்யை ஆலயத்தின் கோசாலையில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பெறுகிறார்கள்

தீபத்திருவிழாவின் கொடித்துணியும் தீபத்தின் திரித்துணியும் பர்வதராஜ குலத்தினரே தருகிறார்கள் மலையில் தீபம் ஏற்றும் உரிமையும் அவர்களுக்கே

கார்த்திகை தீபத்தில் சிவதரிசனம் செய்த பின்னர்தான் திருவண்ணாமலை வாழ் மக்கள் அவரவர் வீடுகளில் மின்விளக்குக் கூட போடுவார்கள்

எத்தனை காற்று மழை அடித்தாலும் பதினோறு நாட்கள் விடாமல் எரியும் தீபத்தை சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் பார்க்கும் ஆனந்தத்தை சொல்லால் வடிக்கவும் இயலுமோ?!

கிபி 1745 ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்தின் அமைச்சர் வெங்கடப்ப ராயர் என்பவர்தான் இன்று மலைமேல் உள்ள தீபக்கொப்பரையை வழங்கியவர்

பதினோறு நாட்கள் கழித்து கொப்பரை கீழிறக்கப் பட்டு அதில் உள்ள தீபக்கரியை ஆலயத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு பின்  மார்கழி திருவாதிரையில் இருந்து பிரசாதமாக கொடுப்பார்கள்

தொட்டாலே நெய்மணக்கும் அந்த தீபக்கரியை நெற்றியில் இட்டு மகிழ்ந்து சிவானந்த வெள்ளத்தில் திளைக்கலாம்

திருவண்ணாமலை குறித்து திரட்டிய தகவல்களில் கால்பகுதியே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது, அதன் பெருமையை முழுதாக சொல்லவும் முடியாது இன்று
ஆதலால் சொல்லுவோம்

​அண்ணாமலைக்கு அரோகரா​ என்று...

சிவாயநம🙏🏻🙂

Thursday, 1 December 2016

திருவண்ணாமலை

260 கோடி வயது:

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.

அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்:

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்:

அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது.

மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார்.

இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர்.

இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்:

அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.

குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள்.

இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்:

திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது.

அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார்.

அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்:

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்!

இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள்.

இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு:

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து.

இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா!

இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி!

அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்:

அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.

ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு.

இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை:

திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது.

மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும்.

மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.

இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும்.

மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும்.

தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை:

மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.

அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.

தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள்.

அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும்.

பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்:

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம்.

ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர்.

சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார்.

இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

கற்கடேஸ்வரர் ஆலயம்

மாயவரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் வடக்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு சிவபெருமான் ஆலயம் உள்ளது. அங்குதான் தேவலோகத்தை சார்ந்த ஒரு தேவதை நண்டாக வந்து சாப விமோசனம் பெற்றது. அந்த ஆலயத்தை கற்கடேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கின்றார்கள். கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமமான திருவிசைநல்லூரில்   இருந்து சற்று தள்ளி உள்ள குக்கிராமமான திருந்துதேவன்குடி என்ற இடத்தில் உள்ள ஆலயம் இது. இந்த ஆலயம் குறித்த பல ஆச்சர்யமான கதைகள் உள்ளன.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மாமுனிவரான துர்வாச முனிவர் ஒரு காட்டில் சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வனப்பகுதிக்கு வந்த ஒரு தேவதை அவர் யார் என்பதை அறிந்திடாமல் அவர் செய்த பூஜையை விமர்சனம் செய்து கொண்டு ஒரு நண்டு போல தன்னை உருமாற்றிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து அவரை கேலி செய்தவண்ணம் இருந்தது.  தனது பூஜையை அவமதிக்கும் விதத்தில் நண்டு போல உருமாற்றம் செய்து கொண்டு கேலி செய்த அந்த தேவதை பூமியிலே ஒரு நண்டாக பிறக்கட்டும் என முனிவர் சாபமிட்டார்.

அப்போதுதான் தன்  சுயநினைவுக்கு வந்த தேவதை அந்த மாமுனிவர் யார் என்பதை தெரிந்து கொண்டு  அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பின் அறியாமையினால் தான் செய்த பிழையை மன்னித்து சாபத்தை விலக்குமாறு  வேண்டிக் கொண்டது.  ஆனால் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் அந்த நண்டு பூமியிலே சென்று வாழ்ந்து கொண்டு தினமும் ஒரு தாமரை மலரை கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அவர் அந்த நண்டுக்கு காட்சி தந்து சாப விமோசனமும் தருவார் என்று கூறினார். அடுத்தகணம் அந்த தேவதை நண்டாக மாறியது. பூலோகமும் சென்றது.  

நண்டு பூலோகம் சென்ற இடம் தற்போது கற்கடேஸ்வரர்  ஆலயம் உள்ள இடம் ஆகும். அந்த ஆலய பகுதி வெற்று  இடமாக இருந்தது அதை சுற்றி நாலுபக்கமும் அகழி இருக்க அதன் நடுவில் ஒரு தாமரை குளமும் இருந்தது. அந்த குளம் முழுவதும் தாமரை மலர்கள் பூத்து இருந்தன. அந்த வெற்றுப் பகுதியில் சிவபெருமான் ஒரு சில காரணங்களுக்காக ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்திருந்தார். ஆகவே அங்கு சென்ற நண்டுக்கும் மன மகிழ்ச்சி கிடைத்தது. சிவபெருமானுக்கு தினமும் ஒரு தாமரை மலரைப் போட்டு பூஜை செய்து சாபவிமோசனம் பெற நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்து இருந்தது.  

இப்படியாக ஒருபக்கத்தில் சில நிகழ்சிகள் நடந்து கொண்டு இருக்கையில் இன்னொருபுறம் தேவலோக அதிபதியான இந்திர பகவானும் அதே இடத்தில் சிவபெருமானுக்கு தினமும் 1008 தாமரை மலர்களை போட்டு பூஜை செய்து  வந்தார். அசுரர்களுடன் பலமுறை போரிட்டு பலத்தை இழந்து நின்ற இந்திர பகவானை 48 நாட்கள் தினமும் 1008 தாமரை மலர்களை போட்டு சிவபெருமானை ஆராதித்து பூஜித்தால் சிவபெருமானின் அருள் கிடைத்து தேவேந்திரனுக்கு இழந்த பலன்கள் மீண்டும் திரும்பக் கிடைக்கும் என வியாழ பகவான் அறிவுறுத்தி இருந்ததினால் இந்திரா பகவானும்  அங்கு தினமும் பூஜை  செய்து வந்தார். அதற்கு உதவியாக இருக்க தினமும் 1008 தாமரை மலர்கள் அந்த தாடகத்தில் பூக்க வருண பகவான் ஏற்பாடு செய்து இருந்தார்.  

இவை எதுவுமே நண்டு உருவில் இருந்த தேவதைக்கு தெரியாது. தாடகத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் உள்ளதே என மகிழ்ந்த நண்டும், தினமும் அதில் இருந்து ஒரு பூவை எடுத்துக் கொண்டு போய்  சிவபெருமானுக்கு பூஜை செய்து வந்தது. 

இந்திர பகவானுக்கும் தினமும் அவர்  போடும் தாமரையில் ஒன்று குறைவாக உள்ளதே என்ற செய்தி தெரியாது.  வருண பகவான் தினமும் சரியாக 1008 பூக்கள் பூக்க ஏற்பாடு செய்து இருந்ததினால் அவர் பூக்களை எண்ணி எடுத்துக் கொண்டு செல்லவில்லை. தாடகத்தில் இருந்த அத்தனை பூக்களையும் பறித்துக் கொண்டு சென்று பூஜித்து வந்தார். ஆகவே  அவர் 1008 பூக்களுக்கு பதிலாக 1007 பூக்களைக் கொண்டு பூஜை செய்து வந்திருந்தார்.  ஒருவருக்கொருவர் அறியாமல் இருந்த அந்த நிலையில் நண்டும் தனது கடமையை தவறாமல் செய்து வந்தது.

சில நாட்கள் சென்றது. ஒருநாள் வியாழ பகவான் மனதில் 1008 பூக்களுக்கு பதிலாக 1007 பூக்களைக் கொண்டு இந்திர பகவான் பூஜை செய்து வந்ததினால் இந்திர பகவான் செய்து வந்த பூஜையை சிவபெருமான் ஏற்றுக் கொள்ளவில்லை  என்ற உண்மை தெரிந்தது. உடனே சென்று இந்திர பாவானிடம் சென்று அதை பற்றிக் கூறினார். அதைக் கேட்ட இந்திர பகவான் அதிர்ந்து போனார். வருணனோ தினமும் தான் பூக்க வைத்த மலர்கள் 1008 உள்ளது என்பதை சரி பார்த்து  விட்டு சென்று கொண்டு இருந்ததாகக் கூறினார். ஆகவே யார் ஒரு பூவை தினமும் திருடுகிறார்கள் என்பதை ரகசியமாக இந்திர பகவான் கண்காணிக்க முடிவு செய்தார். மறுநாள் விடியற்காலை நண்டும் எப்போதும்போல ஒரு பூவை பறித்துக் கொண்டு சென்று சிவபெருமான் தலையில் போட்டு பூஜை செய்வதை  பார்த்து விட்டார்.

அதனால் கோபம் அடைந்த இந்திர பகவானும்   அந்த நண்டைக் கொல்ல  வாளினை  உருவ, நண்டும் தப்பிக்க முயன்றபோது சிவலிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் தோன்றியது. உடனே நண்டு அந்த பள்ளத்தில் சென்று மறைந்து கொள்ள உருவிய வாளைக் கொண்டு சிவலிங்கத்தை எப்படி வெட்ட முடியும் என இந்திர  பகவான் திகைத்து நிற்க அடுத்தகணம் அந்த நண்டு தேவதையாக உருமாறியது.   இருவர் முன்னும் சிவபெருமான் காட்சி அளித்து அருள் புரிந்தார்.  நடந்தவை இருவருக்கும் தெரிந்தது. மீண்டும் அதே இடத்தில் 48 நாட்கள் 1008  தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்தால் மட்டுமே இந்திர பகவான் இழந்த பலத்தை மீண்டும் பெற முடியும் என்பது விதியானதால், இந்திர பகவானும் மீண்டும் 1008 பூக்களைக் கொண்டு 48 நாட்கள் பூஜை செய்து இழந்த அனைத்து பலத்தையும் பெற்றார். அதன் பின் அவரவர் ஆகவே தத்தம் இடங்களுக்கு சென்றுவிட  சிவபெருமான் சில காரணத்துக்காக அங்கேயே பூமிக்குள் சிவலிங்க உருவில் மறைந்து கொண்டார்.

சில ஆயிரம் வருடங்கள் உருண்டன. சோழ மன்னர் பரம்பரையை சேர்ந்த ஒரு மன்னன் அந்த பூமியை ஆண்டு வந்தார். அவருக்கு தீராத பக்கவாத நோய் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியவில்லை. அவருடைய நோயை யாராலும் தீர்க்கவும் முடியவில்லை. அந்த நிலையில் திடீர் என ஒருநாள் சிவபெருமானும் பார்வதி தேவியும் மருத்துவர் உருவில் அரண்மனைக்கு வந்து அவருடைய நோயை தீர்ப்பதாகக் கூறினார்கள். உள்ளெ வந்தவர்கள் மன்னனின் நெற்றியில் திருநீர் இட்டபின் ஒரு ருத்ராக்ஷ மாலையையும் அணிவித்து விட்டு அவர் வாயில் எதோ மூலிகை மருந்தையும் ஊற்றினார்கள். மறுநாள் மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றார்கள்.  என்ன அதிசயம், படுத்தப் படுக்கையாக வீழ்ந்து கிடந்த மன்னன் மறுநாள் காலையில் எழுந்து தாம் செய்து வந்த  வேலைகளை தாமே செய்யத் துவங்கினார். அனைவரும் அதிசயித்து நின்றார்கள். எப்படி 24 மணி நேரத்துக்குள்ளாகவே வியாதி பூரண குணம் ஆயிற்று என எண்ணி, மருத்துவத்தின் சக்தியை வியந்தார்கள். காலையில் மீண்டும் மருத்துவர்கள் வந்தார்கள். அரசன் அவர்களை வெகு விமர்ச்சையாக வரவேற்று கௌரவித்து பல பரிசுகளையும் பொருட்களையும் தந்தார். அனால் அவர்கள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தாம் தமது கடமையை மட்டுமே செய்ததாகக் கூறி, சன்மானத்துக்குப் பதிலாக குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கூறி அங்கு பூமியில் மறைந்துள்ள சிவலிங்கம் மற்றும் பார்வதி தேவியின் சிலையை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறினார்கள். அப்படி செய்தால் அந்த ராஜ்யமே வளம் பெரும் என்றும் கூறினார்கள். அதுவே தம்முடைய சன்மானம் என்றார்கள். ஆனால் அவர்கள் யார் என்பது எவருக்கும் தெரியவில்லை.

அடுத்த நாள் காலையில் அந்த மன்னன் அந்த மருத்துவர்களுடன் அவர்கள் அழைத்துச் சென்ற இடத்துக்கு சென்று ஆட்களை விட்டு பூமியை தோண்டச்  செய்தார். அங்கு சிவலிங்கம் மட்டுமே கிடைத்தது. ஆனால் பார்வதி தேவியின் சிலை கிடைக்கவில்லை என்பதினால் வேறு எங்கு தோண்டுவது என மருத்துவர்களைக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு அவரைத் தேட அவர்கள் காணவில்லை. எவராலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே வந்திருந்தவர்கள் தெய்வங்களாகவே இருக்க வேண்டும் என்பதை மன்னன் புரிந்து கொண்டான். அதன் பின் சிவலிங்கத்தை வெளியில் எடுத்து பார்வதியின் சிலை ஒன்றை வடிவமைத்து அங்கேயே ஆலயம் எழுப்பினார். பல காலம் பொறுத்து அதே இடத்தின் வேறு மூலையில் தோண்டியபோது  மருத்துவர்கள் கூறிய பார்வதி தேவியின் சிலை கிடைத்தது. அதையும் அங்கேயே பிரதிஷ்டை செய்தார்கள்.

அதற்குப் பிறகே மன்னனுக்கும் அந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்த அனைத்து விவரங்களும் துர்வாச முனிவரின் சீடர்களான பிற முனிவர்கள் மூலம் தெரிய வந்தது.  இந்த மேன்மைகள் உலகத்துக்கு தெரிய வரத் துவங்க  அந்த ஆலயத்து மூலவரை கற்கடேஸ்வர் (கர்கட் என்றால் நண்டு என்று அர்த்தம்) அதாவது நண்டின் சாபத்தை விலக்கியவர் என்ற பொருளில்  அழைத்தார்கள். அதை போலவே மருத்துவ உருவில் பார்வதி தேவியும் வந்ததினால் அவளை அருமருந்துநாயகி என பெயரிட்டு அழைத்தார்கள். அதைப் போலவே பிறகு கிடைத்த பார்வதி தேவியின் அபூர்வ சிலைக்கு அபூர்வநாயகி என பெயரிட்டார்கள்.  நண்டுக்கு சாபம் விலக்கியதினால்  நண்டை ராசியாகக் கொண்டவர்களுக்கும்  கடக ராசிக்காரர்களுக்கும் இது பரிஹாரஸ்தலம் ஆயிற்று.

இந்த ஆலயத்தின் இன்னொரு மேன்மை என்ன என்றால் வேறெந்த சிவபெருமான் ஆலயத்திலும் இல்லாத நிலையில்  பார்வதி தேவிக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. இரண்டிலும் அவள் வெவேறு தோற்றத்தில் காணப்படுகிறாள்.

இந்த ஆலயத்தில் சந்திர பகவான் யோக நிலையில் அமர்ந்தவண்ணம் காணப்படுகின்றார்.  மேலும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி மருத்துவர்கள் உருவில் வந்து மன்னனின் நோயை குணப்படுத்தியதால் அவர்கள் செய்த பணியை தொடர அவர்கள் சார்ப்பில் தன்வந்தரி பகவானும் இந்த ஆலயத்தின் ஒரு சன்னதியில் காணப்படுகின்றார்.  சாதாரணமாக தன்வந்தரி பகவான் விஷ்ணு பெருமான் ஆலயத்தில் மட்டுமே காணப்படுவார்.  எந்த  நோயாளின்  நோயும் விலக  இங்கு வந்து தன்வந்தரி பகவானை வேண்டினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.