அண்ணாமலையாரும் அறியாத செய்திகளும்
ஆமாம் பினை வந்து அணையும் சாரல் அண்ணாமலை என்று நம் சம்பந்தப் பெருமான் குறித்தருளும் திருவண்ணமலை, உலகின் தொண்மை வாய்ந்த நகரங்களில் ஒன்று
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில் என்று தேவரம் குறிக்கும் அண்ணாமலையார் நாம் உய்யும் வண்ணம் சன்னதி கொண்டுள்ள தலம் இது
சோணசைலம், சோணகிரி, சோணாசலம், அருணாசலம், அருணகிரி, அருணை உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் இத்தலத்தில் சிவகங்கை, உத்தரதீ்த்தம், சக்கரதீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகிய தீர்த்தங்களுடன் கிரிவலப்பாதையிலும் நகரிலுமாக 360 தீர்த்தங்கள் அமைந்துள்ளன
மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களிலும் ஸ்காந்தபுராணம் உள்ளிட்ட வடமொழி புராணங்களிலும் மணிமேகலை சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்கத்தமிழ் நூல்களிலும் அருணையம்பதியின் மாண்பு பேசப்பட்டுள்ளது
ஆறு பிரகாரங்கள் என்னும் சுற்றுப்பாதைகளையும், ஒன்பது கோபுரங்களையும் கொண்டு இருபத்து நான்கு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து ஈடும் எடுப்புமாக காட்சி அளிக்கும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை
பதினோறு நிலைகளுடன் 217 அடி உயரம் உள்ள இவ்வாலயத்தின் இராஜகோபுரம் கிபி 1516 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட
இக்கோபுரம் காண்போர் விழிவிரியும் வண்ணம் உயர்ந்து நிற்கும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ?!
147 சிற்றாலயங்கள், 22 விநாயகர் சன்னதிகள், 306 மண்டபங்கள், 43 செப்புத்திருமேணிகள், 119 படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் என எண்ணிலிச் சிறப்புகளை பெற்ற கோயில் அண்ணாமலையார் கோயில்
ஐம்பூதங்களில் நெருப்பு தலமாகவும் ஆறு ஆதரங்களில் மணிப்பூரகத் தலமாகவும் நினைக்க முக்தி தரும் தலமாகவும் 22 நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்றாகவும் விளங்குவது திருவண்ணாமலை
இங்கு மலையே லிங்கம், மலையே சிவம்🙏🏻
கடல் மட்டத்தில் இருந்து 2668 அடி உயரத்தில் கொடுமுடியை கொண்ட திருவண்ணாமலை ஐந்து சிகரங்களை கொண்டது
பாக்கர் என்னும் மேலைநாட்டு அறிஞர் இம்மலை பலகாலங்களுக்கு முன்பு பெரும் நெருப்பு உருவமாக இருந்துள்ளது என்று ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்
பால் பிரண்டன் என்னும் அறிஞர் லெமூரிய கண்ட நிலப்பரப்போடு ஒப்பிடத்தக்க பழமை வாய்ந்தது திருவண்ணாமலை என்கிறார்
கார்பன் ஆய்வின் படி கணித்ததில் இம்மலையின் வயது 260 கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்னும் நவீன அறிவியல்
பல காலங்களுக்கு முன்பு தீமலையாக இருந்திருக்கலாம் இதன் குழம்பிலிருந்து தக்காண பீடபூமி உண்டாயிருக்கலாம் என்றும் கூறுகிறது
நவீனம் எரிமலை என்று கண்ணை மூடிக்கொண்டு கணக்கு போட கோள்நாக அணையானும் குளிர் தாமரையானும் காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான் என்று பாடி இறைவன் தீயாக நின்றதை நினைவுக் கூறுகிறார் நம் சம்பந்த பெருமான்
பூவார் மலர் கொண்டு எனத்துவங்கும் பதிகத்தில் அண்ணாமலையின் ஏழாம் நூற்றாண்டு காட்சியை அழகுற விளக்குவார் புகலிவேந்தர்
மலையின் மீது குகை நமசசிவாயர் ஆலயம், விருபாஷி குகை, கந்தாஸ்ரமம், உண்ணாமுலையம்மன் முலைப்பால் தீர்த்தம், ஆலமரக்குகை, சடைச்சமிகள் குகை ஆகியன தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்கள்
மலைவலம் வருதல் மிகச்சிறந்த வழிபாடு இன்று அடியார்கள் கிரிவலம் வரும் பதினான்கு கிமீ பாதை பாண்டியர்களின் காலத்தில் செப்பனிடப் பட்டதால் அதற்கு விக்கிரம பாண்டியன் ஏழாம் வீதி என்று பெயர்
இன்று பலரும் நடந்தே மலைவலம் வருகிறார்கள் என்றாலும் மலையை அங்க பிரதட்சினம், அடிப்பிரதட்சினம், தவழ் பிரதட்சினம், சர்வாங்க சரீர பிரதட்சினம், வழுவு பிரட்டு பிரதட்சினம், அடிதாண்டு பிரதட்சினம் என்கிற வகையிலும் மலைவலம் வந்துள்ளனர் முந்தய நூற்றாண்டு மக்கள்
அண்ணாமலையார் சன்னதிக்கு நேர்பின்னே மலையின் பின்பு இருக்கும் சன்னதி திருநேர் அண்ணாமலை எனப்படும்
கிரிவலப்பாதையில் கௌதம முனிவர் ஆசிரமத்தின் எதிரில் இருந்து பார்த்தால் மலையின் மூன்று சிகரங்களை ஒரு சேர பார்க்கலாம் திரிமூர்த்தி தரிசனம் என்னும் இவ்விடத்தில் மண்டியிட்டு வணங்க வேண்டும்
கிரவலபாதையில் இருக்கும் அடி அண்ணாமலை என்னும் இடம் உண்மையில் அணி அண்ணாமலை ஆகும். இவ்விடத்தில் இருந்து பார்த்தால் மலையின் ஐந்து சிகரங்களையும் ஒருசேர காணலாம்
இறைவனின் ஐந்து முகதரிசனமாக காட்சி தரும் மலையை இவ்விடத்தில் விழுந்து வணங்க வேண்டும்
அட்ட திக்கு பாலகர்கள் வழிபட்ட லிங்கங்கள், பதினாறு விநாயகர் சன்னதிகள் பதினேழு முருகன் சன்னதிகள், பாத மண்டபங்கள் இரண்டு நந்தி மண்டபங்கள் எட்டு உள்ளிட்ட கணக்கிலடங்கா புண்ணிய கோயில்களும் கிரிவலப் பாதையில் உண்டு
சமயக்குரவர்கள் நால்வரும் பாடிப்பரவிய திருவண்ணாமலையில் அருணகிரிநாதர், சேஷாத்ரி நாதர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், தேசிக பரமர், அம்மணி அம்மாள், விருபாட்சி முனிவர், பாணிபாத்திரர், இரமணர், நாராயணகுரு, விசிறி சுவாமிகள் உள்ளிட்ட எண்ணற்ற அருளாளர்கள் வழ்ந்துள்ளனர்
ஆலயத்தில் சித்திரை மாதம் பவுர்ணமி பிரம்மோற்சவம் பங்குனி திருக்கல்யாணம், மாசி வல்லாளன் திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா திருவெம்பாவை திருவிழா திருவூடல் திருவிழா ஆகியன கொண்டாடப் படுகின்றன
அபித குஜாம்பாள் என்னும் உண்ணாமுலையம்மன் தனிசன்னதி கிபி பனிரென்டாம் நூற்றாண்டில் எடுக்கப் பெற்றது
உண்ணாமுலை நாச்சியார் காமக்கோட்டம் என்று இவ்வாலயத்தை கல்வெட்டுகள் குறிக்கின்றன
கோயில் வரவு செலவுகளுக்கு, பூசைகளுக்கு என நிலம் பொன் கால்நடைகள் வழங்கிய ஏராளமான சோழர் கல்வெட்டுகள் இங்கு உண்டு புகழ்பெற்ற அனைத்து சோழ மன்னர்களின் நேரடி கல்வெட்டுகளையும் இவ்வாலயம் கொண்டுள்ளது, தவிர பல்லவர், பாண்டியர், விஜயநகரர், நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகளும், ஊர் சபையோர் வேளாளர் வணிகர் குழுக்களின் நிவந்த கல்வெட்டுகளையும் கொண்டுள்ளது
மதுராந்தக சோழ வளநாட்டு பெண்ணை வடகரை திருவண்ணாமலை என்றும் இராஜராஜ சோழவள நாட்டு வானக்கோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டு அண்ணாமலை என்று கல்வெட்டுகள் இவ்வூரை பலவாறு குறிக்கின்றன
வீரராகவன் மதில் என்பது போன்ற பல புதிய பெயர்களை உடைய மதில்கள், பிரமநாயகன் என்பது போன்ற பல மடங்களும் இருந்துள்ளன
பல்லவ குல அரசி ஒருவர் எடுத்த நங்கையாழ்வார் ஈஸ்வரம் என்னும் கோயிலை கல்வெட்டுகள் அடையாளம் காட்டுகின்றன
மங்கையற்கரசியார் என்னும் பெண் தன் நகைகளை விற்று திருக்குளம் தூர்வாரிய செய்தி நம்மை நெகிழ வைக்கிறது
ஆலயத்தின் மிகமுக்கிய உற்சவமான கார்த்திகை திருநாளில் மலையின் மீது 3500 கிலோ நெய்யில் ஆயிரம் மீட்டர் நீளம் உள்ள திரி கொண்டு தீபம் ஏற்றப்படும் இத்தீப நெய்யை ஆலயத்தின் கோசாலையில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பெறுகிறார்கள்
தீபத்திருவிழாவின் கொடித்துணியும் தீபத்தின் திரித்துணியும் பர்வதராஜ குலத்தினரே தருகிறார்கள் மலையில் தீபம் ஏற்றும் உரிமையும் அவர்களுக்கே
கார்த்திகை தீபத்தில் சிவதரிசனம் செய்த பின்னர்தான் திருவண்ணாமலை வாழ் மக்கள் அவரவர் வீடுகளில் மின்விளக்குக் கூட போடுவார்கள்
எத்தனை காற்று மழை அடித்தாலும் பதினோறு நாட்கள் விடாமல் எரியும் தீபத்தை சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் பார்க்கும் ஆனந்தத்தை சொல்லால் வடிக்கவும் இயலுமோ?!
கிபி 1745 ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்தின் அமைச்சர் வெங்கடப்ப ராயர் என்பவர்தான் இன்று மலைமேல் உள்ள தீபக்கொப்பரையை வழங்கியவர்
பதினோறு நாட்கள் கழித்து கொப்பரை கீழிறக்கப் பட்டு அதில் உள்ள தீபக்கரியை ஆலயத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு பின் மார்கழி திருவாதிரையில் இருந்து பிரசாதமாக கொடுப்பார்கள்
தொட்டாலே நெய்மணக்கும் அந்த தீபக்கரியை நெற்றியில் இட்டு மகிழ்ந்து சிவானந்த வெள்ளத்தில் திளைக்கலாம்
திருவண்ணாமலை குறித்து திரட்டிய தகவல்களில் கால்பகுதியே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது, அதன் பெருமையை முழுதாக சொல்லவும் முடியாது இன்று
ஆதலால் சொல்லுவோம்
அண்ணாமலைக்கு அரோகரா என்று...
சிவாயநம🙏🏻🙂
No comments:
Post a Comment