Tuesday, 22 November 2016

ஆகமக்கோயில் " என்றால் என்ன


சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு.
அவை:
1. காமிகம் - திருவடிகள்
2. யோகஜம் - கணைக்கால்கள்
3. சிந்தியம் - கால்விரல்கள்
4. காரணம் - கெண்டைக்கால்கள்
5. அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
6. தீப்தம் - தொடைகள்
7. சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
9. அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
10. சுப்ரபேதம் - தொப்புள்
11. விஜயம் - வயிறு
12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - மார்பு
14. அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
15. வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
16. ரௌரவம் - செவிகள்
17. மகுடம் - திருமுடி
18. விமலம் - கைகள்
19. சந்திரஞானம் - மார்பு
20. பிம்பம் - முகம்
21. புரோத்கீதம் - நாக்கு
22. லளிதம் - கன்னங்கள்
23. சித்தம் - நெற்றி
24. சந்தானம் - குண்டலம்
25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
27. கிரணம் - இரத்தினா பரணம்
28. வாதுளம் - ஆடை

முருகப்பெருமான், இவற்றை 28 லிங்கங்களாக பிரதிஷ்டை செய்து, விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயிலில் பூஜை செய்துள்ளார்.
28 லிங்கத்திற்கும் ஆகமபெயர்கள் சூட்டப்பட்டு, கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் கீழ்கண்டவாறு வழிபாடு செய்யப்படுகின்றன .

காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர்.
இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலையே " ஆகமக்கோயில்" என்று அழைப்பர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு சென்று
சிவனை வணங்கி வேண்டியதை பெறுவோமாக .

திருக்கேதீச்வரர் திருக்கோயில

கேது பகவானுக்கு அம்மை அப்பராக காட்சியளித்த திருத்தலம் மற்றும் உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ள தலம்

அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில், மன்னார் (இலங்கை)

மூலவர் :  திருக்கேதீச்வரர்

அம்மன்/தாயார் :  கவுரி

தல விருட்சம் :  வன்னி மரம்

தீர்த்தம் :  பாலாவி

ஆகமம்/பூஜை : -

பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்.

பாடியவர்கள்:  திருஞான சம்பந்தர், சுந்தரர்

தேவார பதிகம்:

புத்திராய்ச் சில புனைதுகில் உடையவர்

புறனுரைச் சமண்ஆதர்

எத்தர் ஆகிநின்று உண்பவர் இயம்பிய

ஏழைமை கேளேன்மின்

மத்த யானையை மறுகிட உரிசெய்து

போர்த்தவர் மாதோட்டத்து

அத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே

தீச்சரம் அடைமின்னே.- திருஞான சம்பந்தர்

நத்தார்புடை ஞானன்பசு

ஏறிந்நனை கவிழ்வாய்

மத்தம்மத யானைஉரி

போர்த்தமழு வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு

பாலாவியின் கரைமேல்

செத்தார்எலும்பு அணிவான்திருக்

கேதீச்சரத் தானே. -   சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இத்தலம் இலங்கையில் உள்ளது.

திருவிழா: 
பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் 

தல சிறப்பு: 
உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. 

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 269 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:
இறைவன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, கவுரி தெற்கு நோக்கியபடி தரிசனம் அருள்கிறாள். கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் சூரியன், சம்பந்தர், கேது, சேக்கிழார், நால்வர், சுந்தரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். பின்புறம் பழைய மகாலிங்கம். இங்கு பூஜை செய்து முடித்தபின்னரே கருவறை தீபாராதனை.

அடியார்களின் நலனைக் கருதி ஆலயத்துக்கு வெளிப்புறமாக சம்பந்தர் மடம், சந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம்,. நாவலர் மடம் என்று பற்பல மடங்கள் அமைந்துள்ளன. 

பிரார்த்தனை :

ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 

நேர்த்திக்கடன்

சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 

தலபெருமை

கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. 

ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது தோஷம் இருப்பின், பாலாவியில் நீராடி, கேதீச்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று ஐதீகம். பாலாவி தீர்த்தம், பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கும் மகா சக்தி படைத்தது. இங்கு நீராடி பித்ருபூஜை செய்தால், கயையில் பித்ரு பூஜை செய்த புண்ணியம் கிட்டும். சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன், இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். 

பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால், மாதுவட்டா என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். 

அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது, தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி, அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால், நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.

ஐந்து திருத்தேர்கள் உள்ளன. அதில் முதல் தேரில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் சிலை வைப்பார்கள். சிவராத்திரி இரவு முழுக்க இங்கு பூஜை நடைபெறுகிறது. காலையில் பாலாவியில் நீராடி, விரதத்துடன் நீர் முகந்து வந்து பக்தர்கள் தம் கையாலேயே பஞ்சாட்சரம் கூறியபடியே அபிஷேகம் செய்விப்பது காசியைப் போன்றே கண்கொள்ளாக் காட்சியாகும்.

தல வரலாறு

10, 11 ஆண் நூற்றாண்டில், சோழ மன்னன் ராஜேந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது. சுந்தர பாண்டியனும் பல திருப்பணிகள் செய்ததாக, கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அதன்பின்னர் போர்த்துகீசியர் படையெடுப்பில் இக்கோயிலிலிருந்து தூண் மற்றும் பெரிய கற்களை உடைத்து எடுத்து மன்னார் கோட்டையைக் கட்டியதாக வரலாறு.

பின்னர் ஆங்கிலேயர் கையில் சிக்கிய இக்கோட்டை. காவெள்ளத்தில் புயலில் சிதைந்து மண்மேடாகியது. விடிவெள்ளியாக அவதரித்த யாழ்ப்பாணத்து சைவப் பெருவள்ளல் ஆறுமுக நாவலர் கனவில், அந்த இடைமருதின் ஆனந்தத் தேன் சொரியும் பொந்து போல இந்த இலங்கை திருக்கேதீச்சரத்திலும் ஒரு தேன்பொந்து மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள். என்று சுட்டிக் காட்டப்பட்டது. 1893-ல் மீண்டும் அவ்விடத்தை சுமார் 43 ஏக்கர் நிலப்பரப்பினை, வாங்கி கோயிலுக்கு அளிக்க, மீண்டும் திருப்பணிகளுடன் 1910-ல் சிறுகோயில் கட்டப்பட்டது. அப்போது மண்ணில் சிதையுண்ட நந்தி, சோமாஸகந்தர், கணேசர், பலிபீடம், துவஜஸ்தம்பம், அர்த்த மண்டபம் ஆகியவை திருப்பணிகள் மூலம் வெளிப்பட்டன. 

இறையருளால் பழைய கருவறை மகாலிங்கமும் மண்ணிலிருந்து வெளிப்பட, லிங்கத் திருமேனியை வெளியே எடுக்கையில் சிறிது பழுதுபட்டதால், அவரை மேற்கு பிராகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். கருவறைக்கு, காசியிலிருந்து புதிய லிங்கம் தருவிக்கப்பட்டதாக ராமேஸ்வர வரலாறு தெரிவிக்கிறது.

சிறப்பம்சம்

*அதிசயத்தின் அடிப்படையில்:* உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது.

அன்னாபிஷேகம்

உலகத்திற்கே படியளக்கும் இறைவனான சிவபெருமானுக்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும் சிறப்பு மிக்க நிகழ்வே ‘அன்னாபிஷேகம்’. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில், சகல சிவன் ஆலயங்களிலும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

திருமூலர் தனது திருமந்திரத்தில் சிவலிங்கம் பற்றி இவ்வாறு கூறுகிறார். சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்கள் மாலையாகவும், திசைகள் ஆடையாகவும் இருக்கின்றன. கடலில் ஆவியாக்கி எடுத்துச்செல்லப்படும் நீர், மேகங்களின் மூலம் மழையாக பொழிந்து ஆகாய லிங்கத்தை அபிஷேகம் செய்கிறது. அந்த அபிஷேக நீர் பூமியில் விழுந்து உலக உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன என்கிறார் திருமூலர்.

ஆகாயம் என்னும் ஆண்டவனின் ஒரே கூரையின் கீழ்தான் உயிர்கள் அனைத்தும் வசிக்கின்றன. எனவே அந்த ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதனை எந்த பேதமும் இன்றி அனைவருக்கும் கொடுக்க வேண்டும்  என்பதே இதன் தத்துவார்த்த உண்மையாகும்.

பொதுவாக நிலத்தில் விளையும் பொருட்களில் முதன்மையானதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். அந்த முறைப்படியே ஐப்பசி மாதத்தில் அறுவடையாகும் புது நெல்லைக் கொண்டு சாதம் சமைத்து, அதை முழுமையாக இறைவனுக்கு படைப்பது என்பதே அன்னாபிஷேக நிகழ்வுக்கான ஐதீகம் என்று காரண காரியம் கூறப்படுகிறது.

தான, தர்மங்களில் சிறந்தது அன்னதானம் என்பது சான்றோர்கள் வாக்கு. அதுவே நிதர்சனமான உண்மையாகும். கொடை வள்ளலாக திகழ்ந்த கர்ணன், இல்லை என்று வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் தன்மையுடையவனாக திகழ்ந்தான். பலவித தர்மங்களைச் செய்த அவன், தன் வாழ்நாளில் அன்னதானத்தை மட்டும் செய்யவில்லை. ஆகையால் மேல் உலகம் செல்லும்போது, அவன் கடும் பசியால் வாடினான் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் அன்னதானத்திற்கு இருக்கும் சிறப்பு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அத்தகைய அன்னத்திற்கும், அதை உருவாக்கித் தரும் இறைவனுக்கும் மரியாதை செய்யும் விதமாகவே அன்னாபிஷேக நாள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி அன்று காலையிலேயே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் இறைவனின் திருமேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, லிங்கம் முழுவதும் மறையும் வகையில் அன்னத்தை படைத்து வழிபடுவார்கள். மாலை நேரத்தில் அன்னாபிஷேகம் கொண்ட பெருமான், இரண்டாம் காலம் வரை அதாவது மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அன்னாபிஷேகராக காட்சி தருவார். அதன்பின் அன்னம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மீதம் உள்ள அன்னம் திருக்குளத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ, கடலிலோ கரைக்கப்படும். இறைவனின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேக விழா சிறப்புக்குஉரியதாகும். சுமார் 13½ அடி நீளமும், 60 அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசியை அன்னமாக சமைத்து, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேக விழாவில் அதன் சுற்றுப்புறபகுதி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கிறார்கள். திருச்சியில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

அனைத்து சிவாலயங்களிலுமே இதுபோன்று அன்னத்தால் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. வழிபாட்டுக்குப் பிறகு அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதே போல வீடுகளிலும் கூட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, அவற்றை சுற்றத்தில் உள்ளவர்களுக்கு வழங்கினால் பலன் கிடைக்கும்.

கோவில்களில் சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த வருட அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு கஷ்டப்படமாட்டார்கள் என்பது ஐதீகம். ஒருசிலர் நல்ல செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும். பசி உணர்வு மேலோங்கும். ஆனால் அவர்களால் சாப்பிட முடியாது. இதற்கு ‘அன்ன த்வேஷம்’ என்று பெயர். இந்தக் குறைபாடு உள்ளவர்கள், இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல், ஏழைகளுக்கு தானம் செய்தால் அன்ன த்வேஷம் விலகும்.

மேலும் இறைவனுக்குச் சாத்தப்படும் அன்னத்தை பிரசாதமாக வாங்கி உண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, புத்திரப்பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

பக்தனை சோதித்த நெல்லையப்பர்.

★பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அக் கால கட்டத்தில் வேணுவனமாகக் காட்சியளித்த திருநெல்வேலியில் வேத பட்டர் என்ற சிவபக்தர் சிவபெருமானை வணங்கி தினமும் சுவாமிக்கு செந்நெல் அறுத்து அமுதாக்கி பூஜை செய்து வந்தார்.

★பஞ்ச காலத்தின்போது சிவபெருமான், வேத பட்டர் என்னும் தன் அடியாரின் பக்தியை சோதிக்க விரும்பி சிவபெருமான் அவரை வறுமையில் சிக்கச் செய்தார். வேத பட்டர் ஒரு நாள் வீடுவீடாக நெல் சேகரித்து கோயில் சன்னதி முன் உலரச் செய்துவிட்டு நீராடச் சென்றார்.

★அப்போது திடீரென மழை பெய்தது. இதைப் பார்த்த வேதபட்டர் "இறைவனுக்கு அமுது படைக்க உலர வைத்த நெல் என்ன ஆனதோ'' என்று கலங்கிய படி கோயிலுக்கு ஓடோடி வந்தார். ஆனால், அங்கு உலரப் போட்டிருந்த நெல்லைச் சுற்றியே மழை பெய்ததே தவிர நெல்லின் மீது வெயில் அடித்தது.

★இதைப் பார்த்த வேத பட்டர் மெய்சிலிர்த்தார். தான் கண்ட காட்சியை மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் அக் காட்சியைப் பார்த்து பக்தியில் உருகினான். பின்னர் நெல் மட்டும் நனையாது காத்த பரம்பொருளே இன்று முதல் #நெல்வேலி_நாதர் என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பெயர் நாளடைவில் நெல்லையப்பர் என்று பக்தர்களால் அழைக்கப்படலாயிற்று.

★இதே போல ராமக்கோன் என்னும் பக்தர் வேணுவனம் வழியாக அரசனுக்கு பால் கொண்டு செல்லும்போது மூங்கில் முளையால் கால் இடறி பால் தினமும் கொட்டி வந்தது. ஒரு நாள் கோபத்தின் எல்லைக்கே சென்ற ராமக்கோன் அந்த மூங்கில் முளையை கோடாரியால் வெட்டினார்.

★அப்போது அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதைப் பார்த்து பயந்த ராமகோன் மன்னன் ராமபாண்டியனிடம் தான் கட்ட காட்சியைக் கூறினார். மன்னன் அங்கு விரைந்து வந்த பார்த்த போது சிவபெருமான் அங்கு லிங்கம் வடிவில் காட்சிக் கொடுத்தார்.

சிவனுக்கு_அபிஷேகம்_செய்வதால் ஏற்படும்_பலன்கள்.

சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். சிவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

👉 சிவனை தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

👉 சுத்தமான பசுவின் கறந்த பாலில் அபிஷேகம் செய்தால் தீர்க்க ஆயுள் கிடைக்கும்.

👉 சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் குயிலினும் இனிய குரல் கிடைக்கும்.

👉 சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.

👉 இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிட்டும்.

👉 பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

👉 தயிர் அபிஷேகம் செய்தால் சம்பத்து கிடைக்கும்.

👉 கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.

👉 மஞ்சள் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

👉 ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும்.

நோய் தீர்க்கும் சிவாலயங்கள்


சோம்பல் நீக்கி சுறுசுறுப்பு தரும் தலம்நாளெல்லாம் உழைத்த மனிதனுக்கு, சோர்வு ஏற்படுவதும் அதன் காரணமாக ஓய்வும், உறக்கமும் தேவைப்படுவதும் இயற்கை. பறவைகள் கூட பகலில் ஓடியாடித் திரிந்து உணவு தேடி உண்டு விட்டு, இரவில் தங்கள் கூடுகளில் தங்கி இளைப்பாறும். பின்னர் மீண்டும் அதிகாலையில் சுறுசுறுப்பாகப் பறப்பது வழக்கம். சில மனிதர்கள் எப்போதும் மந்தமாக இருப்பதும், வேலை எதுவும் செய்யாமல் சோம்பிக் கிடப்பதும் அவர்களுக்கு நல்லதல்ல. இதனால் அவர்கள் மனதளவில் மட்டுமல்லாது உடலளவிலும் நோய்வாய்ப்பட்டு போகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

உள்ளத்தையும், உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு வரும். தேனீக்களையும், எறும்புகளையும் அதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட எறும்புகள் வழிபட்ட திருஎறும்பியூர் ஈசன் கோவிலைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.எறும்பீசர்

மலைக்கோட்டை மாநகரமான திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது, திருவெறும்பூர் என்று அழைக்கப்படும் திருஎறும்பியூர். நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே வடபுறத்தில் கிரீடம் வைத்தாற்போல கோவில் ஒன்று குன்றின் மீது அமைந்திருக்கிறது. நெடுஞ்சாலையில் இருந்து தோரணவாயில் வழியாக சில அடிகள் சென்றால், மலையின் படிக்கட்டுகள் தொடங்கும். 125 படிக்கட்டுகளில் ஏறி உச்சியை அடைந்தால், கோட்டைச் சுவரில் கோபுரம் இருக்கும். கிழக்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கும் இறைவனை எறும்பீசர், பிப்பிலீ ஈசர் என்றும் சொல்கிறார்கள். ‘பிப்பிலீ’ என்றால் எறும்பு என்று பொருள்.

மேலும் மதுவனேசுவரர், மாணிக்கநாதர், மணிக்கூடாசலபதி போன்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. மணல் லிங்கமாக இருப்பதால், இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சிவபெருமானின் சுயம்பு வடிவான லிங்கத் திருமேனி இத்திருக்கோவிலில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. சில கோவில் களைப் போல வழுவழுப்பாக இல்லாமல், சொரசொரப்பாகவும், இரண்டாகப் பிளவுபட்ட தோற்றத்திலும் இத்தல சிவலிங்கம் காணப்படுகிறது. சிவலிங்கத்தின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை சக்தியாகவும் பாவித்து, சிவசக்தியாகவே பக்தர்கள் தரிசிக்கிறார்கள். சற்று சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த லிங்கத்திற்கென ஒரு புராணக் கதை உலவுகிறது.எறும்புகள் பூசித்த சிவன்

தேவர்களின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும் தாரகாசுரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ, மண்ணுலகில் இத்தலத்தின் மலை மீது இருக்கும் சிவனை பூக்கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், அசுரனின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கூறினார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் அசுரனுக்கு பயந்து, சிறிய உருவான எறும்பாக வடிவெடுத்து இத்தலத்திற்கு வந்தனர். மேலும் எறும்பு வடிவத்திலேயே, சிவனது சிரம் மீது ஏறி பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டனர். எறும்பு வடிவில் இருந்த தேவர்களுக்கு அருள்செய்ய நினைத்த சிவபெருமான், எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக வழுவழுப்பான தனது லிங்க உருவத்தை சொரசொரப்பாக மாற்றிக்கொண்டாராம். 

எறும்புகளின் வழிபாட்டில் மகிழ்வுற்ற எம்பெருமான் அசுரனை அழித்து, தேவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். எறும்புகள் வழிபட்டதன் காரணமாக இத்தல இறைவனுக்கு ‘எறும்பீசர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இன்றும் சிவ பூஜை நடக்கும் நேரத்தில் கருவறையில் எறும்புகள் ஊர்ந்து செல்லுவதைக் காணலாம். தேவர்கள் வந்து தினமும் எறும்பு வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. தத்துவம் சொல்லும் துவாரபாலகர்

இத்திருத்தல நாயகி தெற்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இத்தல அம்பாள், சவுந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி, சுகந்தகுழல் ஈஸ்வரி, ரத்தினாம்பாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். மலையின் கீழ் இருந்த அம்பாள் கோவில் சிதிலமடைந்ததால், புதிய சிலையுடன் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு மலைமீது தற்போது இருக்கும் சன்னிதியை அமைத்திருக்கிறார்கள்.

சிவன் சன்னிதி செல்லும் முன்பு உள்ள துவாரபாலகர் களில் ஒருவர் கோபமான முகத்துடனும், மற்றொருவர் சாந்தமான முகத்துடனும் இருக்கிறார்கள். கோபத்துடன் வந்தாலும் கடவுளை வழிபட்டபின் சாந்தம் கிடைக்கும் என்ற தத்துவத்தை இந்த சிலைகள் போதிப்பதாகச் சொல்கிறார்கள். 

இத்தல விநாயகர் ‘செல்வ விநாயகர்’ என்பதால், அவர் தன்னை வழிபடுபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வழங்குகிறார். மூலஸ்தானத்தின் பின்புறம் வள்ளி– தெய்வானையுடன் விளங்கும் சுப்ரமணிய சுவாமி இருக்கிறார். இவரது பீடத்தில் அறுங்கோண (ஆறு) சக்கரம் இருக்கிறது. இந்த வடிவேலனை வழிபடுபவர்கள் எதிரிகள் பயம் நீங்கி வாழ்வார்கள். நவக்கிரகங்களின் சன்னிதியில் சூரியனின் மனைவியான உஷா, பிரத்யுஷா ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் நோக்கியவாறு காட்சி தருகின்றனர். இந்தச் சிவ மலைக்கு எதிரே அடிவாரத்தில், பிரம்ம தீர்த்தம் உள்ளது. தல விருட்சமான வில்வமரம் மலை மேல் இருக்கிறது.அப்பர் பாடல் 

‘அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறறிந்தென் உள்ளந் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை செழுஞ்சுடரை சென்றடையப் பெற்றேன் நானே’ என்று அப்பர் பெருமான் திருத்தாண்டகத்திலும், பத்து திருக் குறுந்தொகையிலும் பதிகங்களாகப் பாமாலை சூட்டியுள்ளார். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில், இந்த ஆலயம் 70–வது திருத்தலமாகத் திகழ்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். காலாற நடந்து 125 படிகள் கடந்து, அங்கு வீசும் மலைக் காற்றை அனுபவித்தாலே நமக்கு உற்சாகம் பிறக்கும். இன்னும் என்ன தாமதம்? நீங்களும் சுறுசுறுப்புடன் திகழ இன்றே எறும்பீசரை வழிபட கிளம்புங்கள்.